Thursday, August 13, 2020

திருச்சபை

 *இவள் தான் திருச்சபை*

திடீரென்று ஆண்டவரின் ஒரு வசனம் ஞாபகம் வந்தது. "உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் - லூக்கா 12:7)"

ஆம், மனிதர்கள் நேசிக்கக் கற்றுக் கொண்ட முறைகளே ஆண்டவரிடம் இருந்து தான். ஆண்டவரோடு உறவாடும் அனுபவங்களில் பல்வேறு விதங்கள் உள்ளது. அந்த உறவை நன்றாகப் புரிந்து கொண்டால், அது கணவன் மனைவி உறவுக்கு முன்பாகவே நித்திய காலமாய் வைக்கப்பட்ட முன்மாதிரி என்பது புரியும். 

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து....

எபேசியர் 5:25

மேற்கொண்டு இதை எழுதும் பவுல், கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இருக்கும் உறவு ஒரு இரகசியம் என்று எழுதுகிறார். ஒரு மனிதனுக்கும் தன் மனைவிக்கும் உள்ள நெருக்கம் (intimacy) எப்பிடி சொல்ல முடியாத அறைக்குள் இருக்கும் இரகசியமோ, அப்பிடித்தான் கிறிஸ்துவுக்கும் சபையாகிய நமக்கும் உள்ள இரகசியம். 

நன்றாக குளித்து, வாசனையான திரவியங்கள் அடித்து, அழகான உடை உடுத்தி, அறையை சுத்தம் செய்து, மேஜையை அழகாக்கி, மிதமான வெளிச்சம் கொண்ட விளக்கைக் கொளுத்தி வைத்து, இரவில் வீட்டுக்காரர் சாப்பிட வருவார் என்று புதிதாக சமைத்த உணவை மேஜையில் வைத்துக் காத்திருக்கிறாள் மனைவி. அவளுக்கு அவ்வளவு நேசம், அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். சீரியல், மொபைல் ஃபோன் எல்லாம் பார்க்கவில்லை. காரணம் அவள் மனதில் நிறைந்திருப்பது நேசருடைய நினைப்பு மட்டுமே. திடீரென்று மனதில் ஒரு எண்ணம், வேகமாக பீரோவை திறந்து அவருக்குப் பிடித்த ஒரு நெக்லஸை எடுத்து அணிந்து மேலும் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். 

திடீரென்று கதவைத் தட்டும் சத்தம். கதைவை வேகமாக சென்று திறக்கிறாள், நேசர் வந்துவிட்டார். பிறகு அவர், அவளோடு உறவாடி போஜனம்பண்ணுகிறார். இது போன்ற ஒரு வேளை தான் சபையும் கிறிஸ்துவும் எதிர்கொள்ளவிருக்கும் வேளை. மனவாட்டியகிய சபை இப்படித்தான் ஆயத்தப்பட்டுக் காத்திருக்க வேண்டும். 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 

வெளிப்படுத்தின விசேஷம் 3:20"

கதவைத் திறந்தால், *அறைக்குள்* தானே பிரவேசிக்க முடியும், அதென்ன *அவனிடத்தில்* பிரவேசிப்பது? விளக்கங்கள் தேவையில்லை, அந்த மணவாளன் மனவாட்டியின் நெருக்கத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அவரோடு சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆனந்தம், எவ்வளவு கேள்விகள் அவரிடம் கேட்கலாம், புரியாத வேத வசனங்கள், அவருடைய சிலுவைப் பாடுகள், அவருடைய அன்பின் நீள அகல ஆழ உயரங்கள் என பல கேள்விகள் கேட்கலாம். அது அநேகமாக நம்முடைய இதயங்கள் கொழுந்து விட்டு எரியும் நேரம் (லூக்கா 24:32). அது தான் சாலமோன் சொன்ன எரியும் நேசத்தழல். (உன்னதபாட்டு 8:6)

கொஞ்சம் பின்நோக்கிச் செல்வோம், அந்த மனைவி ஆயத்தத்தோடு இருக்கிறாள், அவர் வரத் தாமதித்தால், இந்த மனைவி கொஞ்சம் கண் அசர்ந்து சோஃபாவில் படுத்துவிட்டாள் (சோஃபாவில் தான் படுத்தாள், படுக்கை அறையில் இல்லை). திடீரென்று கதவைத் தட்டும் சத்தம் (அல்லது காலிங் பெல் சத்தம்). வேகமாக எழுந்து, இதோ வந்துவிட்டேன் என்ற பதற்றக் குரலோடு, கொஞ்சம் டச்சப் பண்ணிக்கொண்டு கதவைத் திறக்கிறாள். நேசர் வந்துவிட்டார். மீண்டும் அதே நேச சம்பவங்கள்..

மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 

நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 

அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். 

மத்தேயு 25:5-7

மேற்கண்ட வசனத்திலே, புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் எல்லோரும் தூங்கிவிட்டார்கள், அது நம்முடைய மாம்சத்தின் இயல்பு. ஆனால் புத்தியுள்ளவள் எண்ணெய் என்னும் ஆயத்தத்தோடு தூங்கினாள். அது வீட்டை சுத்தப்படுத்தி, சமைத்து, அலங்கரித்து அரை விழிப்போடு சோஃபாவில் தூங்குவதற்குச் சமம். ஆனால் புத்தியில்லாதவள், வீட்டைக் குப்பையாகப் போட்டு, மதியம் வைத்த பழைய சோறை ஃபிரிட்ஜுல் வைத்துவிட்டு, எந்த ஆயுத்தமும் இல்லாமல் படுக்கை அறையில் நன்றாக தூங்கிவிட்டாள். மணவாளன் வந்தபோது இவளுக்கு நடந்தது என்னவென்று அதே வேதபகுதியின் கிழே வாசிக்கலாம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஆயத்தம், ஏதோ சில கடமைகளை நிறைவேற்றுவதில் முடிந்துவிடாது. வேலைக்காரர் கூட இந்த அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொடுக்க முடியும். ஆனால் இந்த மனவாட்டியின் ஆயத்தம், சாதாரண கடமையாக இல்லாமல், உள்ளிருந்து வெளிப்படும் நேசத்தழலின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். இந்த நேசத்தழலை வெள்ளம் போன்ற எந்த சூழ்நிலையும் தணிக்க முடியாது.

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும், நேசம் மரணத்தைப்போல் வலிது, நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. 

உன்னதப்பாட்டு 8:6

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது, ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். 

உன்னதப்பாட்டு 8:7

தன் வீட்டிலுள்ள ஆஸ்திகள் அனைத்தையும் கொடுத்தாலும், அந்த மனவாட்டியின் நேசத்திற்கு முன்பாக அது அசட்டைபண்ணப்படும். தான் தகப்பனார் பெரிய செல்வந்தராக இருந்தாலும், தன் காதலனைக் கைபிடிக்க அனைத்தையும் உதறிவிட்டு ஓடி வந்த காதலியின் நேசத்தைப் போல. ஊரே அந்தப் பெண்ணை தூஷித்தாலும், தன் காதல் கணவனுக்காக அனைத்து சொற்களையும் அசட்டை செய்யும் காதலியின் நேசத்தைப் போல. 

எனக்கு நீங்க மட்டும் போதும் என்று சொல்லும் காதலியின் நேசம், இந்த திருச்சபையான மனவாடிக்குள் கொழுந்து விட்டு எரிகிறது. நேசரின் காதல் வைராக்கியம் அவர் உயிரைக் கூட நமக்குக் கொடுத்தது. அதற்கு பதில் செய்யும் காதல் வைராக்கியம் இந்த மனவாட்டிக்குள் தீப்பிடித்து எரிகிறது. பரிசுத்த அழகும் ஆயத்தமும் எப்போதும் இவளுக்குள் இருக்கிறது. இவள்தான் நேசருடைய ஒரே பார்வையும் எண்ணமும். இவள் தான் திருச்சபை.

- முகில்.