Tuesday, August 15, 2023

வீணான அடிமைத்தனம் - யாருக்கு லாபம்?

வீணான அடிமைத்தனம் - யாருக்கு லாபம்?

முக்கால்வாசி இங்கே கலாச்சாரம் கண்றாவின்னு சொல்வது எல்லாம் ஜாதியையும் சிலருடைய தலைமைத்துவத்தையும் காப்பாத்துறதுக்காகத் தான். இவங்க கலாச்சாரம்ன்னு சொல்லி ஜாதியை காப்பாத்துறதுக்கு எல்லா மதமும் துணை போகிறது. அப்புறம் இந்த முன்னோர் மொழிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் சிலருடைய லாபத்துக்கும் வயித்துக்கும் தான் பயன்படுகிறது. இது தான் உண்மை. அடுத்தவன் எப்பிடி வாழனும் என்பதை அவனவன் தான் முடிவு செய்ய வேண்டும். கடவுளே அதை முடிவு செய்வதில்லை. மனுஷன் ரோபோ இல்லை. 

கிறிஸ்தவத்துக்கு வருவோம். இயேசு கிறிஸ்துவே சிலருடைய வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட கலாச்சார பாரம்பரிய குப்பைகளை சாக்கடையில் போட சொன்னார். ஆனால் இன்று எதையோ உருவாக்கி அதை இழுத்து ஒவ்வொரு மனிதனின் தலையில் சுமத்துவதென்பது இயேசுவை விட்டு விட்டு ஒரு கட்சியை நடத்துவது போன்றதே.

யூத மதம் இப்பிடித்தான் மனிதனை அடிமை ஆக்கியது. பலருடைய உயிரைக் காவு வாங்கியது. சாதியவாதிகளின் ஆணவக்கொலைக்கும் யூதர்களின் கல்லெறிதலுக்கும் (கிறிஸ்தவமும் சேர்ந்துள்ள கல்லெறி கலாச்சாரதிற்கும்) பெரிய வித்தியாசம் இல்லை. 

கிறிஸ்தவ மதம் பல்லாண்டு காலங்களில் பலரை வாழ வைத்திருக்கிறது. இயேசுவின் நோக்கத்தை அப்படியே நிறைவேற்றியது. ஆனால் கிறிஸ்தவத்தின் ஒரு பகுதி இன்று வீணான கட்டுப்பாட்டு சூழலுக்குள் சிக்கி உள்ளது. 

கிறிஸ்தவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள் : தயவு செய்து உங்கள் மதத்தை நம்பாதீர்கள். மதம் மதத் தலைவர்களால் ஆளப்படுகிறது. அது அவர்களுக்கு மட்டுமே லாபமாக அமையும். அவர்கள் தங்கள் இஷ்டப்படி மதத்தை வளைத்துக் கொள்வார்கள். மதத் தலைவர்கள் தங்களுக்குப் பாதகம் வரும் எந்த சத்தியக் கோட்பாட்டையும் பேச மாட்டார்கள். ஆனால், மற்றவர்களுடைய வாழ்கையைத் தாங்கள் ஆள்வதற்காக எப்படிப்பட்ட புதிய கட்டுப்பாட்டையும் உருவாக்குவார்கள். இது அனைத்து மதத் தலைவர்களிடமும் இருக்கும் பொதுப்புத்தி. இதைக் கேள்வி கேட்கும் நானே நாம் நம்பிய இடங்களை விட்டு வெளியே தள்ளப்பட்டேன். நான் செய்த அனைத்து நன்மைகளும் மறக்கப்பட்டுப் போன தருணங்களை வலியுடன் உணர்ந்திருக்கிறேன். அந்த நிலை திரும்புமோ என்றும் அச்சப்படுகிறேன்.

கர்த்தரை நம்புங்கள். நம்மைக் கடவுளுக்கு நேராக வழிநடத்தும் நேர்மையாளர்களை நம்புங்கள். பிற மதத்தவர்களிடம் சேர்த்து நம்பிக்கையையும் நட்பையும் ஏற்படுத்துங்கள். அன்பையும் இரக்கத்தையும் வழங்குங்கள். பிற மதத்தையும் டினாமினேஷனையும் வம்பிழுக்க வேண்டாம். நீங்கள் இன்று அறிந்தது கையளவாகக் கூட இருக்கலாம். 

சத்தியம் நம்மை விடுதலையாக்கும். மனிதனின் கட்டுப்பாடுகளோ நம்மை அடிமையாக்கும். மூட நம்பிக்கையையும் மனித அடிமைத்தனத்தையும் எதிர்க்க மார்ட்டின் லூதர்கள் எழும்பி நீதியைப் பேசும்போது அதைப் பரிசீலிக்க வேண்டும். ஆனால், இருதயக் கடினத்தால் மார்டின் லூதர்கள் கொல்லப்பட்டால், உயிர்த்தெழுவது தந்தை பெரியாராகத் தான் இருக்கும். 

"இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள், அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. 

ஏசாயா 8:12, 13"

- முகில்