Sunday, March 21, 2021

யார் மூத்த குமாரன்?

 யார் மூத்த குமாரன்?

இயேசு, இளைய குமாரன் - மூத்த குமாரன் உவமையைக் கூறும்போது அவர் மனதில் "மூத்த குமாரர்களாக" இருந்தவர்கள் யூத மதவாதத் தலைவர்கள். இந்த உவமையை இயேசு லூக்கா 15:2ல் யூத மதவாதத் தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாகவே சொல்கிறார்.

இவர்களைக் குறித்து வேறு ஒரு இடத்தில் இயேசு சொல்லும்போது, 

நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

லூக்கா 11 : 52

மேற்கண்ட வசனத்தில் பார்க்கும்போது தேவனுடைய ராஜ்யத்தில் உட்பிரவேசிக்கிறவர்களை தடை செய்யும் மதவாதத் தலைவர்களே மூத்த குமாரர்கள்.  அந்த உவமையில் கூட மூத்த குமாரன், இளைய குமாரன் தேவனுடைய வீட்டிற்குள் வருவதை விரும்பவில்லை. இன்றைக்குக் கூட, ஏற்கனவே தேவனுடைய பதவிகளில் இருப்பவர்கள், புதிதாக வளர்ந்து வருபவர்களை பொறாமையினால் ஒடுக்க நினைக்கிறார்கள். குருடன் பார்வையடைந்ததை பரிசேயர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய மார்க்கத்தை மீறி சத்தியம் வெளிச்சத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைக்கும் தேவனுடைய வீட்டிற்குள் பிற மார்கத்தவர்கள் பிரவேசிக்க முடியாததற்குக் காரணம் இந்த பதவிகளில் இருந்து பெயரும் புகழும் கண்டிருக்கும் "மூத்த குமாரர்களே". 

ஆனாலும் கடைசியில், இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்த பலரை, இயேசு கதவிற்கு வெளியே நிற்க வைத்து, "உங்களை அறியேன்" என்று சொல்வார். புதிதாக அவரிடம் வருபவர்களை மூத்த குமாரர்களைத் தாண்டி அவரே ஓடிச்சென்று அரவணைத்துக் கொள்கிறார். 

இன்றைக்கு இருக்கும் நாட்களில் என் நினைவில் வரும் இயேசுவின் வசனம் "அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மத்தேயு 8:11,12"

- முகில்


Friday, March 12, 2021

நரேந்திர மோடி நமக்குத் தேவை

*நரேந்திர மோடி நமக்குத் தேவை (இது அரசியல் பதிவு அல்ல, தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியது)*

"இந்த மோடிக்கு ஒரு சாவு வராதா" என்று புலம்பும் நபர்களை பார்த்திருக்கிறேன். அவ்வாறு நினைக்கும் சில கிறிஸ்தவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த சிந்தை எவ்வளவு துரதிஷ்டவசமானது என்பதையும், நம்மை பாதுகாக்க நம்மை ஆள்பவர்களை தேவன் எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் வேத வசன ஆதரங்களோடு பார்க்கலாம்.

வேதத்தில் படிக்கும்போது "அகாஸ்வேரு" ராஜாவின் நாட்களில், ராஜாவைக் கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்ட போது மொர்தெகாய் அந்தத் தகவலை எஸ்தர் மூலமாக ராஜாவுக்கு அறிவிக்கிறான். அதன் மூலம் ராஜாவின் உயிர் காப்பற்றப்படுகிறது. யூதர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆண்டவரை அறியாத புறஜாதிய ராஜா, "செத்து ஒழியட்டும்" என்று மொர்தெகாய் நினைக்கவில்லை. அவரையும் காப்பாற்றும் அந்த "கிறிஸ்துவின் சிந்தை" தான் அகாஸ்வேரு ராஜாவை உயிரோடு காத்தது. மொர்தெகாய் செய்த நன்மையின் பலனை, ராஜா மறந்திருந்தாலும் மொத்த யூத ஜனங்களும் காப்பற்றப்படும்படியாக, தேவன் அதை ஏற்ற நேரத்தில் ராஜாவுக்கு நினைப்பூட்டினார். ராஜாவின் உயிரை மொர்தெகாய் காப்பாற்றியது போல, மொர்தெகாயின் உயிரையும் யூத ஜனங்களின் உயிரையும் ராஜாவே காக்கும்படி தேவன் செய்தார். 

நாம் விரும்புவது போல் நம்முடைய தேசத்தை ஆள்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லா அதிகாரங்களும் தேவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம் பிரதமர் உட்பட, நமக்கு மேலுள்ள அதிகாரங்களின் பாதுகாப்பில் கிறிஸ்தவர்கள் அக்கறை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவர்களுடைய வீழ்ச்சி நமக்கு நன்மையாக இருக்கும் என்று நினைக்க முடியாது. ஒருவேளை அன்றைக்கு அகாஸ்வேரு ராஜா கொலை செய்யப்பட்டிருந்தால், ஆமான் அன்றைய தினமே ராஜாவாகி இருப்பான். மொர்தெகாய் தனக்கும் தன் ஜனங்களுக்குமான நன்மையை பின் வரும் காலங்களில் பெறும்படியாக, எப்படி முன்பே ராஜாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள்!

மொர்தெகாயிடம் இருந்த அதே சிந்தை தான் இன்றைக்கு பொது வெளியில் நரேந்திர மோடியை திட்டும் கிறிஸ்தவர்களுக்கு தேவையாக இருக்கிறது. நம் நாடு ஜனநாயக நாடு என்றாலும், நாம் விரும்பும் நபர்களுக்கு நாம் வாக்களித்தாலும்,  கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனுடைய ராஜ்யத்தின் மேல் நம்பிக்கை உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆம், கர்த்தர் சதாக்காலங்களிலும் அரசாளுகிறார். எல்லா அதிகாரங்களும் தேவனுக்குக் கீழ் தான் இருக்கிறது. நமக்கு மேல் அதிகாரங்களில் வைக்கப்பட்டவர்களுக்காக மன்றாட வேண்டியது நம் கடமை!

- முகில்