Thursday, March 10, 2022

எழுப்புதல் ஏன் தாமதிக்கிறது? - சுயநலமும் சீர்குலைந்த அமைப்பும்

கிறிஸ்தவ மதமும் காங்கிரஸ் கட்சி போல் தான், நல்ல நோக்கங்கள் இருந்தும் உள்ளிருக்கும் சில சுயநலவாதிகளால் தன் வளர்ச்சியை தானே தடுக்கிறது.


எந்த சபைக்கும் போகாத பல கிறிஸ்தவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் எவ்வித விசாரிப்புமின்றி போனதற்குக் காரணம் நன்றாக செட்டில் ஆன விசுவாசிகளை மட்டும் நாடும் ஊழியக்காரர்கள் தான். 


ஏற்கனவே கிறிஸ்துவை விசுவாசிக்கும் பலருக்கே இங்கே நல்ல சபை கிடைப்பதில்லை.  உதாரணத்திற்கு கிறிஸ்துவை அறியாதவர்கள் ஒரு லட்சம் பேர் இன்றே ஆண்டவரை ஏற்றுக்கொண்டால், அவர்களை கையாளும் அளவுக்கு சிறந்த சபைகள் இங்கே இல்லை. மேலும், பாரம்பரிய சபைகள் தவிர, இங்குள்ள பல சபைகளில் சேரும் பலருக்கும் எவ்வித உத்தரவாதமும் பாதுகாப்பும் கிடைப்பதில்லை. மேலும், பாஸ்டர் ஒருவர் நினைத்தால் தான்தோன்றித் தனமாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலை, தனிப்பட்ட அல்லது அமைப்பு சார்ந்த பெந்தெகொஸ்தே சபைகளில் பரவலாக காணப்படுகிறது. இதற்குள் எந்த முறைமையும் கட்டமைப்பும் பெரும்பாலும் இல்லாமல் போனது என்பது, கிறிஸ்தவம், மதமாக அல்லது அமைப்பாக வலுப்பெறாமல் போனதற்கு முக்கிய காரணமாகிறது.


தேவ ஊழியர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் எழுப்புதல் என்பதை பிரசங்க மேடைகளில் வெறும் வார்த்தையாகவே பார்க்க முடியும். சபைகளின் கட்டமைப்பையும், முறைமைகளையும், அதன் ஒழுங்குகளையும் தனிமனித சார்பு இல்லாமல் சீர்படுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.