Sunday, July 4, 2021

ஓநாய்களுக்கு எச்சரிக்கை

ஓநாய்களை இனங்கண்டுகொள்ள நல்ல தருணத்தை ஏற்படுத்திய கர்த்தருக்கு நன்றி. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. வேத வசனத்திலும் நீதியிலும் புரட்சி எழும்பாவிடில் அனைத்தும் சூறையாடப்படும்.. ஆம்.. அனைத்தும்... முட்டு கொடுத்தே வாழ்ந்து பழகிய விசுவாசிகளே, நாளை அந்திக்கிறிஸ்துவுக்கும் முட்டு கொடுக்க வேண்டி வரலாம். 

எதிர்ப்பு சக்தி இல்லாத விசுவாசிகளை நினைத்து வேதனைப்படுகிறேன். எதிர்ப்பு சக்தியை இழந்தால் நோயால் தாக்கப்படுவது உறுதி. ந#ம் முற்பிதாக்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் தவறான ஊழியங்களைக் களைந்து ஏற்படுத்திய நல்ல பாதையில் நடந்தவர்கள், கள்ள ஊழியர்களை உள்ளே அனுமதித்து விட்டு அடுத்த தலைமுறைக்கு எந்தப் பாதையை விட்டுச் செல்லப் போகிறீர்கள்.. 

விசுவாசிகளிடம் பணத்தை சுரண்டும் ஓநாய்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் வஞ்சிக்கும் காலமிது. அனைவரும் சேர்ந்து எதிர்த்தால், தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பது சிலர் மட்டுமென்றால் அவர்கள் மட்டும் அந்த ஓநாய்களால் சபைகளை விட்டு புறம்பாக்கப்படுவார்கள். 

ஒரே ஒரு வசனத்தை நினைவில் கொள்ளுங்கள் (இயேசு, இது போன்ற ஓநாய்களைக் குறித்து சொன்ன வசனம்): அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. (லூக்கா 6 : 44)

#we_stand_with_jesus

Thursday, July 1, 2021

பிரபல கர்த்தருடைய ஊழியர்...

பிரபல கர்த்தருடைய ஊழியர், பணம் நிர்ணயம் செய்து அவருடைய ஆன்லைன் மீட்டிங்-ல் ஆட்களைக் கூட்டினார் என்றும் அதை கேள்விகேட்ட வாலிபனை மிரட்டும் தொனியில் பேசினார் என்பதும் இப்பொழுது சலசலப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவனுடைய ஊழியம் என்பது மக்கள் கட்டணம் செலுத்திப் பெறுவதல்ல என்பதற்கு இயேசுவே நமக்கு முன்மாதிரி. நம்முடைய மிஷனரி முற்பிதாக்களும் தங்களுடைய பொருட்களை எல்லாம் விற்றே இந்த ஊழியத்தை செய்தார்கள் என்பது நம் வரலாறு. ஊழியம் தாங்கப்படுவதற்கு வேதம் புதிய ஏற்பாட்டிலேயே நல்ல முன்மாதிரிகளை வகுத்திருக்கிறது. காலத்திற்கேற்றாற்போல் அவைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தேவ பக்தியை ஆதாயத்தொழிலாக நினைத்து செய்வது பாவம்.

ஆனால் இந்த ஒரு காரியாதைக்குறித்து எந்த ஒரு பெரிய போதகரும் கண்டித்துப் பேசவில்லை. காரணம் பண விஷயத்தில் பலரும் பெரிய உத்தமர்கள் இல்லை. ஒரு ஐ.டி. ரெய்டு விட்டால் பலரும் உள்ளே தான் இருக்க வேண்டும். சீர்திருத்தவாதிகள் போல பேசும் பலரையும் நெருங்கிச் சென்று பார்த்தல், நம்மை மனம் நோகச்செய்யும் செய்யும் பல காரியங்கள் உள்ளே இருக்கும்.
அந்த ஊழியராவது, "ஆமா, நான் என் மக்களிடம் காணிக்கை வாங்கினேன். என்ன தப்பு" என்று கேட்டார். ஆனால் நல்லவர்கள் போல பேசும் பலரும், அதிக காணிக்கை கொடுப்பவர்களை ஒரு விதமாகவும், காணிக்கை கொடுக்க முடியாதவர்களை வேறொரு விதமாகவும் நடத்துவது தேவன் மட்டுமே அறிந்த ரகசியம். காரணம் அந்தப் பொருளாசை "இருதயத்திற்குள்" இருப்பது, அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாது. உள்ளுக்குள் இருப்பதை வைத்து தீர்ப்பு செய்யும் தேவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விடுவோம். தப்பித்துக்கொள்வதும், தங்களுக்கு தெரிந்த பெரிய புள்ளிகளை வைத்து அவரையே மிரட்டுவதும் அவரவர் சாமர்த்தியம்.

Sunday, March 21, 2021

யார் மூத்த குமாரன்?

 யார் மூத்த குமாரன்?

இயேசு, இளைய குமாரன் - மூத்த குமாரன் உவமையைக் கூறும்போது அவர் மனதில் "மூத்த குமாரர்களாக" இருந்தவர்கள் யூத மதவாதத் தலைவர்கள். இந்த உவமையை இயேசு லூக்கா 15:2ல் யூத மதவாதத் தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாகவே சொல்கிறார்.

இவர்களைக் குறித்து வேறு ஒரு இடத்தில் இயேசு சொல்லும்போது, 

நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

லூக்கா 11 : 52

மேற்கண்ட வசனத்தில் பார்க்கும்போது தேவனுடைய ராஜ்யத்தில் உட்பிரவேசிக்கிறவர்களை தடை செய்யும் மதவாதத் தலைவர்களே மூத்த குமாரர்கள்.  அந்த உவமையில் கூட மூத்த குமாரன், இளைய குமாரன் தேவனுடைய வீட்டிற்குள் வருவதை விரும்பவில்லை. இன்றைக்குக் கூட, ஏற்கனவே தேவனுடைய பதவிகளில் இருப்பவர்கள், புதிதாக வளர்ந்து வருபவர்களை பொறாமையினால் ஒடுக்க நினைக்கிறார்கள். குருடன் பார்வையடைந்ததை பரிசேயர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய மார்க்கத்தை மீறி சத்தியம் வெளிச்சத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைக்கும் தேவனுடைய வீட்டிற்குள் பிற மார்கத்தவர்கள் பிரவேசிக்க முடியாததற்குக் காரணம் இந்த பதவிகளில் இருந்து பெயரும் புகழும் கண்டிருக்கும் "மூத்த குமாரர்களே". 

ஆனாலும் கடைசியில், இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்த பலரை, இயேசு கதவிற்கு வெளியே நிற்க வைத்து, "உங்களை அறியேன்" என்று சொல்வார். புதிதாக அவரிடம் வருபவர்களை மூத்த குமாரர்களைத் தாண்டி அவரே ஓடிச்சென்று அரவணைத்துக் கொள்கிறார். 

இன்றைக்கு இருக்கும் நாட்களில் என் நினைவில் வரும் இயேசுவின் வசனம் "அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மத்தேயு 8:11,12"

- முகில்


Friday, March 12, 2021

நரேந்திர மோடி நமக்குத் தேவை

*நரேந்திர மோடி நமக்குத் தேவை (இது அரசியல் பதிவு அல்ல, தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியது)*

"இந்த மோடிக்கு ஒரு சாவு வராதா" என்று புலம்பும் நபர்களை பார்த்திருக்கிறேன். அவ்வாறு நினைக்கும் சில கிறிஸ்தவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த சிந்தை எவ்வளவு துரதிஷ்டவசமானது என்பதையும், நம்மை பாதுகாக்க நம்மை ஆள்பவர்களை தேவன் எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் வேத வசன ஆதரங்களோடு பார்க்கலாம்.

வேதத்தில் படிக்கும்போது "அகாஸ்வேரு" ராஜாவின் நாட்களில், ராஜாவைக் கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்ட போது மொர்தெகாய் அந்தத் தகவலை எஸ்தர் மூலமாக ராஜாவுக்கு அறிவிக்கிறான். அதன் மூலம் ராஜாவின் உயிர் காப்பற்றப்படுகிறது. யூதர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆண்டவரை அறியாத புறஜாதிய ராஜா, "செத்து ஒழியட்டும்" என்று மொர்தெகாய் நினைக்கவில்லை. அவரையும் காப்பாற்றும் அந்த "கிறிஸ்துவின் சிந்தை" தான் அகாஸ்வேரு ராஜாவை உயிரோடு காத்தது. மொர்தெகாய் செய்த நன்மையின் பலனை, ராஜா மறந்திருந்தாலும் மொத்த யூத ஜனங்களும் காப்பற்றப்படும்படியாக, தேவன் அதை ஏற்ற நேரத்தில் ராஜாவுக்கு நினைப்பூட்டினார். ராஜாவின் உயிரை மொர்தெகாய் காப்பாற்றியது போல, மொர்தெகாயின் உயிரையும் யூத ஜனங்களின் உயிரையும் ராஜாவே காக்கும்படி தேவன் செய்தார். 

நாம் விரும்புவது போல் நம்முடைய தேசத்தை ஆள்பவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லா அதிகாரங்களும் தேவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம் பிரதமர் உட்பட, நமக்கு மேலுள்ள அதிகாரங்களின் பாதுகாப்பில் கிறிஸ்தவர்கள் அக்கறை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவர்களுடைய வீழ்ச்சி நமக்கு நன்மையாக இருக்கும் என்று நினைக்க முடியாது. ஒருவேளை அன்றைக்கு அகாஸ்வேரு ராஜா கொலை செய்யப்பட்டிருந்தால், ஆமான் அன்றைய தினமே ராஜாவாகி இருப்பான். மொர்தெகாய் தனக்கும் தன் ஜனங்களுக்குமான நன்மையை பின் வரும் காலங்களில் பெறும்படியாக, எப்படி முன்பே ராஜாவுக்கு செய்திருக்கிறான் பாருங்கள்!

மொர்தெகாயிடம் இருந்த அதே சிந்தை தான் இன்றைக்கு பொது வெளியில் நரேந்திர மோடியை திட்டும் கிறிஸ்தவர்களுக்கு தேவையாக இருக்கிறது. நம் நாடு ஜனநாயக நாடு என்றாலும், நாம் விரும்பும் நபர்களுக்கு நாம் வாக்களித்தாலும்,  கிறிஸ்தவர்களாகிய நாம், தேவனுடைய ராஜ்யத்தின் மேல் நம்பிக்கை உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆம், கர்த்தர் சதாக்காலங்களிலும் அரசாளுகிறார். எல்லா அதிகாரங்களும் தேவனுக்குக் கீழ் தான் இருக்கிறது. நமக்கு மேல் அதிகாரங்களில் வைக்கப்பட்டவர்களுக்காக மன்றாட வேண்டியது நம் கடமை!

- முகில்

Sunday, February 28, 2021

இயேசுவின் வருகைக்காக ஏன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

இயேசுவின் வருகைக்காக ஏன் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்?

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 

லூக்கா 21:20

இந்த தீர்க்கதரிசனத்தின் முதல் பகுதி சில முறை நிறைவேறி விட்டது. இன்னும் ஒரு முறையாவது நிறைவேறும்.

இதே போல் தான் நினையாத நாழிகையில் வருவது. காலத்தை கணக்கிட்டு காலம் வரும்போது பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கர்த்தரே கண்ணில் மண்ணைத் தூவி விடுவார். இதே போல் தான் அவர் பிறப்பின் இடத்தை வைத்து யூதர்களுக்குச் செய்தார். எப்போதும் விழித்திருக்க வேண்டும் என்று சொல்வது இதற்கு தான்.

தேவனுடைய வசனத்தை cheat code போட்டெல்லாம் hack பண்ண முடியாது. "நினையாத நாழிகையில்" என்று சொல்லப்பட்ட வார்த்தைக்கும் "ரகசிய வருகைக்கும்" சம்பந்தமே இல்லை. "உபத்திரவ காலத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படுதல்" எனப்படுவதற்கும் வசன ஆதாரம் இல்லை. வெளியரங்கமான வருகையில் மட்டுமே இந்த சம்பவம் நிகழும். விழித்திருப்பது, ஆயத்தமாக இருப்பதே நல்லது. காரணம் அது தேவ கட்டளை. காலம் வரட்டும் பார்ப்போம் என்பவர்களுக்கு காலம் வருவதும் தெரியாது, கிறிஸ்து வருவதும் தெரியாது. இருதயத்தை அவரே மந்தமாக்கி விடுவார். மனக் கண்களை குருடாக்கி விடுவார்.

இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக்கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார். 

ஏசாயா 6:10

நம் கண்கள் திறக்கப்பட்டது நம் தெரிந்தெடுப்பு அல்ல. தேவனுடைய ஈவு!

பகுதி 2 - ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம்

ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம் - பகுதி 2 (முழுதும் படிக்கவும், இரவும் பகலும் ஆராய்ந்து நம் பிழையான உபதேசத்தை நம்பக் கூடாது என்பதால் பாரத்தோடு எழுதுகிறேன்)

ரகசிய வருகை என்பது பிசாசின் உபதேசம் என்று போன கட்டுரையில் எழுதியிருந்தேன். இப்போதும் அதைத் தான் எழுதுகிறேன். ஏனென்றால் வேத வசனத்தை மீறும் எந்த உபதேசத்தையும் இதற்கு மேல் மரியாதையாக எழுத முடியாது. இதே "பிசாசின் உபதேசம்" என்னும் வார்த்தை வேதத்திலும் இருக்கிறது. (1 திமோத்தேயு 5:4). கோபப்படாமல் தொடந்து படியுங்கள். கர்த்தர் உங்கள் கண்களை திறப்பாராக. தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன்..

திருடனைப் போல வருகிறேன் என்ற வார்த்தை "விழித்திராதவர்களுக்கு / இருளில் நடப்பவர்களுக்கு" என்பதை வேதத்தில் "திருடனைப் போல" என்று சொல்லப்பட்ட நான்கு இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது சபைக்கானது அல்ல என்பதும் தெளிவாக இதே இடத்தில் (1 தெசலோனிக்கேயர் 5) சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு அவர் திருடன் அல்ல, மணவாளன்.. 

இப்போதைக்கு உயிர்தெழுதல் / சபை சேர்த்துக்கொள்ளப்படுதல் என்னும் காலத்தை கீழ்கண்ட இந்த வசனத்தை ஆதாராங்களோடு பார்க்கலாம்.

"ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 

1 தெசலோனிக்கேயர் 4: 16-17"

இங்கே மூன்று சத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் கர்த்தருடைய ஆரவாரம் முக்கியமானது. அவருடையவர்கள் அவர் சத்தத்தைக் கேட்பார்கள் என்பது இயேசுவின் வார்த்தை (யோவான்10 : 27).  அவருடைய மனவாடிக்கும் வருகையின் எச்சரிப்பு பிரதான தூதன் (மிகாவேலாக இருக்கலாம்) மூலமாகவும், தேவ எக்காளம் மூலமாகவும் தரப்பட்டும். எக்காளம் என்றாலே வரும் காரியத்தை மக்களுக்கு அறிவிப்பதற்குத் தானே.

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 

மத்தேயு 25:6"

இங்கே சத்தம் கேட்கப்பட்டாலும் புத்தியில்லாத கண்ணிக்கைகள் மனந்திரும்பியும் அவருடைய வீட்டிற்குள் பிரவேசிக்க முடியவில்லை. இதே போல் தான் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்ட ஏசா கண்ணீர் விட்டு கவலையோடு தேடியம் பலன் கிடைக்கவில்லை என்று வேதம் சொல்கிறது. (எபிரேயர் 12:16)

மேற்கண்ட  தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட வசனத்தில், "கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மேல்" என்பதை சிந்தித்துப் பாருங்கள். "மேகங்கள் மேல்" என்கிற வார்த்தை வேறு சில இடங்களிலும் இருக்கிறது. சபைகளுக்கு யோவான் இதைத் தான் எழுதுகிறார்.

"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:7"

ஆம். இயேசுவின் பகிரங்க வருகையில் தான் உயிர்த்தெழுதல் நடக்கும். கண்கள் யாவும் அவரைக் காணும் என்பது எப்படி ரகசிய வருகை ஆகும்? பின்பு தான் சபை எடுத்துக்கொள்ளப்படும் (மொத்த சபையும் என்று நினைக்க வேண்டாம், புத்தியுள்ள கண்ணிக்கைகள் மட்டுமே, கடைசி அடையாளங்கள் நடக்கும் போது மனந்திரும்பி விடலாம் என்று நினைத்தால்.. வாய்ப்பில்ல ராஜா, இருதயங்கள் எல்லாம் தேவனுக்குத் தெரியும்).

இதே சம்பவத்தைத் தான் வெளிப்படுத்தின விசேஷம் 14:14 ல் பார்க்க முடிகிறது. பின்பு தான் இயேசு உவமைகளாகச் சொன்ன அறுவடை நடக்கிறது.

இதே சம்பவம் தான் வெளிப்படுத்தின விசேஷம் 6ஆம் அதிகாரத்தின் கடைசியிலும்,7ஆம் அதிகாரத்திலிலும் நடக்கிறது. "அவருடைய மகா கோபாக்கினையின் நாள் வந்துவிட்டது" என்று பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்பிய" பின் தான் மகா உபத்திரவத்தில் இருந்து வந்த பெருங்கூட்ட ஜனம் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறது. அந்த மகா உபத்திரவம் பற்றி ஐந்தாம் முத்திரை உடைக்கப்படும் போது ஆண்டவரே சொல்கிறார். முதலாம் முத்திரையிலேயே அந்திகிறிஸ்து போன்ற ஒருவனை வெள்ளைக் குதிரையில் பார்க்க முடிகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 6,7 தான் யோவானின் அடுத்த தரிசனத்தில் வேறு பார்வையில் காட்டப்பட்டிருக்கிறது. குறைந்தது மூன்று தரிசனங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கிறது. முதல் இரண்டு தரிசனங்களும் தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்படுவதை ஒட்டி முடிகிறது. இது என் பார்வை தான். வேறு பார்வைகளில் படித்தாலும் ரகசிய வருகை இருக்காது. காரணம் அது வேதத்திற்குப் புறம்பானது. இதைத் தனியாக வேறு கட்டுரையில் எழுதுகிறேன்.

மத்தேயு 24:30ல் இயேசு மேகங்கள் மேல் வருக்கிறதை அவரே சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பகுதியில் "சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்" என்று அவரே சொல்லியிருக்கிறார். 

இந்த ரகசிய வருகைப் பிரசங்கியார்கள் சிலர் (அனைவரையும் தவறு சொல்லவில்லை) ஒருவேளை, இயேசு இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று சொல்லக்கூடும். உபதிரவ காலத்தில் மக்களை வேறு ஒரு இயேசுவின் பக்கம் திருப்பி விட வாய்ப்பு இருக்கிறது என்பதை வருத்தத்தோடும் பாரத்தோடும் பதிவிடுகிறேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. இயேசுவே சொல்லியிருக்கிறார். 

"அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 

இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 

ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். 

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 

மத்தேயு 24 : 23 - 28"

இயேசு சொன்ன மேற்கண்ட வசனப்பகுதிகளில் உள்ள சாரம், "ரகசியமாக இயேசு வரமாட்டார், மின்னல் பிரகாசிக்கிறது போல் தான் வருவார்" என்பதே.

நீங்கள் இதுவரை ரகசிய வருகையை நம்பியிருந்தால், நான் சொல்வதினிமித்தம் அல்ல. இயேசு சொல்வதினிமித்தம் இந்த கள்ள உபதேசத்தை விட்டு வெளியே வாருங்கள்.

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்பது ஆழமான வார்த்தை. இதிலும் இரகசிய வருகை இல்லை என்பது நிரூபணமாகும். ஆனால் இதை பின் வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

மாற்றுக்கருத்து இருந்தால் தெளிவாக மேற்கண்ட வசனங்களை ஆராய்ந்து விட்டு,  வசனத்தோடு கருத்தைப் பதிவிடுங்கள். வீண் விமர்சனங்களுக்கு, தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.

- முகில் 

ஆன்லைன் ஆராதனைகள்

சபை ஆராதனைகளை லைவ் செய்வது, டெலிகாஸ்ட் செய்வது நிறுத்தப்பட்டால் தான் தேவனுடைய மகிமை சபைகளில் காணப்படும். சமீப நாட்களில் சபை ஊழியங்கள் ஆன்லைன் ஊழியங்களுக்காக பலிகடா ஆக்கப்படுகிறது.

நான் சொல்வது உங்களுக்கு பைத்தியமாகத் தெரியலாம். ஆனால் இது கடைக்கோடி விசுவாசிகள் ஒவ்வொருவரின் குமுறல். இதுவே உண்மை என்பதை இனி வரும் காலம் விளக்கும். 

ஆன்லைன் ஊழியங்கள் தனியாகவும், சபை ஊழியங்கள் தனியாகவும் இருக்க வேண்டும். காரணம் ஆன்லைன் எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைன் ஆகலாம். சபை கூடுகை என்பது அப்படியல்ல.

- முகில்