Friday, March 27, 2020

Atheist vs Agnostic vs Christian on Corona Virus

Atheist vs Agnostic vs Christian - Corona Virus.

சிலர், கொள்ளைநோய்களால் மக்கள் இறக்கிறார்கள், ஆகையால் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் சிலர், கடவுள் இருந்தால் ஏன் இப்படி நடக்கிறது, கடவுள் ஏன் இதைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று கேட்பார்கள்.

இரண்டு கூற்றுக்கும் வித்தியாசம் உள்ளது. முதல் கூற்றைச் சொன்னவர் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருப்பார் (atheist). இரண்டாவது கேள்வியைக் கேட்டவர் கடவுளைப்பற்றிய ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லாதவராக (agnostic) இருப்பார்.

ஆனால் இறைவன் உண்டு என்றும் மனுக்குலத்தை மீட்க அவர் மனித அவதாரம் எடுத்து இயேசுவாக வந்தார் என்றும் அவர் மீண்டும் வருவார் என்றும் நம்புவதே கிறிஸ்தவம். இதில் தெளிவு உள்ளவன் ஒரு கிறிஸ்தவனாக(christian) இருப்பான்.

ஆனால் தேவன் பாவிகளின் மேல் பேரழிவைத் தருவதுதான் இந்தக் கொள்ளைநோய்கள் என்று சொல்பவர்கள், இந்த இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் புரிந்து கொள்ளாமல், இயேசு என்னும் நல்ல ஆண்டவரை கொரோனா வைரஸை விட மோசமானவராக சித்தரிக்கும் சுயநீதிமான்கள். சொல்லப்போனால், தன்னை agnostic என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட, தனக்கு சரியாகப் புரியவில்லை என்று ஒத்துக் கொள்வார்கள். ஆனால் எனக்கு எல்லாம் புரிந்து விட்டது என்று சொல்லிக் கொண்டு, இயேசுவின் சுவிசேஷத்தை ஜீவனுக்காக பிரசிங்கிக்காமல், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக தீர்க்கிறவர்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்ல முடியாது.

பாவிகளை தேவன் நியாயத்தீர்ப்பு செய்வாரா? ஆம். ஆனால் எப்போது செய்வார்? இயேசு இதைப் பற்றி அக்கினியும் கந்தகமும் அழுகையும் பற்கடிப்பும் உண்டான இடம் என்று சொல்லியிருக்கிறார். கொள்ளநோயால் மரித்தவர்கள் எல்லாம் இங்கே தான் போவார்கள் என்று இயேசு எங்கும் சொல்லவில்லை. மாறாக வேறு ஒன்றை இயேசு சொல்லியிருக்கிறார்.

"சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே, எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். "
(லூக்கா 13:4,5)

மேற்கண்ட வசனத்தில் இறந்து போனவர்கள், நரகம் செல்லும் கொடும்பாவிகள் என்று சொன்னால், அவர்களை விட பெரும் பாவிகள் பூமியில் சுற்றித் திரிய தேவன் அனுமதித்தது எப்படி? முரண்பாடாகத் தோன்றவில்லையா? ஆனால் அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையும் இல்லை என்று வேதம் சொல்கிறதே.

சரி, கொள்ளைநோய்களால் பாவிகள் எல்லோரும் மரிக்க தேவன் இப்பொழுதே நியாயத்தீர்ப்பு செய்துவிட்டார் என்று சொன்னால், எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்கிறாரே. உங்களுக்கு என்ன வேலை?

இதைப்பற்றி புரிந்து கொள்ளத்தான் இயேசுவைப் போல நித்திய ஜீவ சிந்தனைகள் நமக்கு வேண்டும். சுவிசேஷ பாரம் வேண்டும். உன்னை நேசிப்பது போல் பிறனை நேசி என்ற வசனத்தை புரிந்தவனாக இருக்க வேண்டும்.

நான் கிறிஸ்தவன் தான், ஏன் இத்தனை அழிவு என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் agnostic இல்லை. காரணம், எனக்கு என்னுடைய பணி என்னவென்று தெரியும். இயேசுவின் அன்பைப் பகிர்வதும், அவருடைய சுத்தமான சுவிசேஷத்தை சொல்வதும் தான். அவர் அன்பும் இரக்கமும் உள்ளவர் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அவர் அப்படித்தான் இருக்கிறார்.

பாவிகள் சாகிறார்கள் என்று சொல்ல நான் அழைக்கப்படவில்லை. ஏன் என்றால் நானும் ஒருநாள் இந்த தேகத்தை விட்டு பிரிந்துதான் ஆகவேண்டும். நான் கிறிஸ்தவன் என்பதால் ஒரு ஆயிரம் ஆண்டு இங்கேயே குடியிருக்கப் போவதில்லை.

குடியிருப்பு என்பதும் வாழ்வு என்பதும் வேறு. இந்த தற்கால சரீரம் என்னும் குடியிருப்பை விட்டு, வேறு ஒரு குடியிருப்பை என் ஆன்மா பெற்றுக்கொள்ளும். வாழ்வு என்பது நித்திய ஜீவனோடு தொடர்புடையது. பூமியின் வாழ்வு, பரலோக வாழ்வு என்று இடம் சார்ந்த வாழ்வு இல்லை இது. தற்கால வாழ்வு, நித்திய வாழ்வு என்னும் பொருள் சார்ந்த வாழ்வு. இடத்தைப் பற்றி எனக்கு பெரிய கவலை இல்லை. காரணம் இயேசு, என்னை மீட்க, பரலோக மேன்மையை விட்டு பூமிக்கு வந்தார். அவரோடு இருந்தால் போதும், அது தான் என்னுடைய வாஞ்சை. எனக்கு பரலோகத்தில் 100 சென்ட் இடமெல்லாம் வேண்டாம். பல ஊழியர்கள் இதிலும் ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பித்து விட்டனர் என்பது வேதனை.

இயேசு தன்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஏராளம் நித்திய ஆசிர்வாதங்களை உடன்படிக்கையாக ஏற்படுத்தியிருக்கிறார். அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஏதோ மத மாற்றமோ, பெயர்மாற்றமோ செய்யவேண்டியது அல்ல. அவர் சொன்னதெல்லாம் படித்து, அதன்படி வாழ ஒப்புக்கொடுக்கும் அந்த "வாழ்க்கை" மாற்றமே கிறிஸ்தவம்.

என் வாழ்க்கை மாறினால், நான் சிந்திக்கும் விதம் மாற வேண்டும். பிறனைப் பார்க்கும் பார்வை அன்பின் பார்வையாக மாறும். நான் கேட்கும் பல பிரசங்கங்களிலும், நான் சந்திக்கும் பிரசங்கியார்களில் பலரும், இந்த அன்பின் பார்வையை கடத்தத் தவறி விடுகிறார்கள்.

கொரோனா வைரஸ் கொடூரமானது. அது பெற்றோரை பிள்ளையற்றவர்களாகவும், பிள்ளைகளை பெற்றோராற்றவர்களாகவும், துணையிழந்தவனாகவும் மாற்றுகிறது. இயேசுவின் சீடனாக என்னுடைய வேலை இரண்டு. அவர்களுக்காக நான் செய்யும் வேண்டுதல், அவர்களுக்கு நான் செலுத்தும் அன்பு. பிள்ளைகளை இழந்தவர்களுக்கு பிள்ளைகளாக இருங்கள். பெற்றோரை இழந்தவர்களுக்கு பெற்றோராக இருங்கள். துணையிழந்தவருக்கு ஆரதவளியுங்கள். இயேசுவின் அன்பைச் சொல்லுங்கள், செயலில் காண்பியுங்கள். மதத்தைப் பற்றிப் பேசாதீர்கள். உள்ளதைப் பகிர்ந்து கொடுங்கள். வரங்களை தேவன் கொடுத்தால், அதை வைத்து  பெரிய பெர்ஃபாமன்ஸ் பண்ணாமல், குணமாக்குங்கள். என்ன வந்தாலும் இயேசு இதைத்தான் செய்ய சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

அவர் நடந்த வழியிலே நாமும் நடந்தால் தான் இயேசுவின் சீடன். பாதங்களுக்குப் பணிவிடை செய்ய அழைக்கப்பட்டவர்கள் எல்லாரும், எலியாவைப் போல் அக்கினியை இறக்கிக்கொண்டிருந்தால், இயேசு எப்படி வெளிப்படுவார்?

வரும் நாட்களில் உதவி, அன்பு, ஆதரவு ஆகிய தேவைகளோடு பலர் வரலாம். நாம் பேசினால் மட்டும் போதாது, செயலில் வெளிப்படுத்துவோம்.

உங்கள் சகோதரன்,
முகில்.

Thursday, March 5, 2020

உந்தன் தயவில்

உந்தன் தயவில் எழுந்தேன், மீண்டும் விழுந்த போதும்
தேடி வந்து கண்டீர்,
ஓடி ஒளிந்த போதும்.

கேளும் ஆண்டவரே,
மன்னியுமே
கவனியும் ஆண்டவரே
தாமதியாமலே..(2)

மரணம் எந்தன் சம்பளம்;
அதை ஏற்றுக் கொண்ட தேவா.
கிருபைவரமோ ஜீவன்;
அதை பெற்றுத்  தந்தீரே..

சூழ்ந்ததே என்னைப் பேரிருள்
வெளிச்சம் தாரும் தேவா
இழுத்தது கடலின் பேரலை
கரத்தைத் தாரும் தேவா

நித்தம் என்னை நடத்தும் - என்
ஆத்துமாவை தேற்றும்
வறண்ட வாழ்வில் வாரும்
நீரூற்றாய் மாற்றும்


பூட்டின வீட்டின் உள்ளே
வந்து நின்றீர் தேவா - என்
இதய வீட்டில் வாரும்
சமாதானம் தாரும்..