Tuesday, September 21, 2021

ஆபத்தான கலர் சாயம்

 நல்ல பரிசுத்தவான்களாக இருப்பது நல்லதுதான். ஆனால் சிலர், தங்கள் ஆவிக்குரிய நிலைக்கு மாறாக (அதை மிஞ்சி) தங்களை வெளிப்படுத்த முயல்வது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது. நான் எந்த அளவுக்கு பரிசுத்தவானோ அந்த அளவுக்கு இந்த உலகம் என்னை அறிந்தால் போதுமானது. என்னை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் நான் ஒரே மாதிரியான மனிதன் தான். தூரத்தில் என்னை பார்த்துவிட்டு என்னுடைய பொய்யான பிரதிபலிப்பை நம்பி என்னிடம் நெருங்கும் போது என் உண்மை வெளிப்பட்டு விடும். அதன் விளைவாக ஒருவரைக்கூட வாழ்நாள் நண்பனாக ஆதாயப்படுத்த முடியாது. 

அதற்காக நான் பெரிய பாவி, நான் மிக மோசமானவன் என்று சொல்வது ஓவர் பில்டப்பாகத் தெரியும். அது உண்மைக்கு மாறானதாக இருக்கும். எப்போதும் உண்மையையே பேசினால் நம் நிலை குறித்த தடுமாற்றம் பிறருக்கு வராது. முகமூடி என்றைக்கும் ஆபத்தானது தான். இங்கே பல லட்சங்கள் செலவு செய்து அணியப்படும் முகமூடி ஒரு இமைப்பொழுதில் எளிதில் கிழிந்துவிடும். அது காணொளியின் முகப்பில் உள்ள படத்திற்கும் காணொளிக்கும் தொடர்பில்லாததைப்போன்றது. 

அதுபோலவே புகழ்ச்சி என்பதும் இயல்பானதாக இயற்கையானதாக நமக்கு வரவேண்டும். செயற்கையாக நம்மைத் தூக்கிக்காட்டும் விளம்பரங்கள் நம்மை குறுகிய காலத்தில் உயர ஏற்றிவிட்டாலும் உண்மை வெளிப்படும்போது நொடிப்பொழுதில் அது நம்மைத் தாழத் தள்ளிவிடும்.

பின்குறிப்பு : நான் யாரையும் சொல்லல.

  

Saturday, September 18, 2021

பெண்ணைப் பெற்றவருக்கே வரதட்சணை தர வேண்டும்

 யூத கலாசாரத்தில் திருமணம் செய்யும்போது மணமகன் வீட்டார் மணமகளுடைய வீட்டாருக்கு அவளை வளர்த்த செலவை தந்துவிட வேண்டும். மேலும் ஆண்மகன் தான் பெண்ணுக்கு நகை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும். இது மிகச்சிறந்த திருமண முறையாகும். 

ஆனால் இன்றைய நாட்களில், இத்தனை ஆண்டுகள் பெண் பிள்ளைகளை வளர்த்த பெற்றோருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரதட்சணை என்னும் பெயரில் பகல் கொள்ளையடிப்பது எவ்விதத்தில் நியாயம்? இன்னொருவர் உழைப்பை/பொருளைப் பெறும்போது அதற்கான விலையைச் செலுத்தி அதைப் பெறுவதே நியாயம். பெண் என்பவள் வேலைக்குச் செல்வது, வீட்டு வேலை செய்வது, பிள்ளை பெற்று வளர்ப்பது என பல விஷயங்களில் நன்றாக விளங்கும் போது, திருமணத்தில் அவளுக்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.

Thursday, September 2, 2021

உருமாறிய கிறிஸ்தவ "மதம்" எச்சரிக்கை

 உருமாறிய கிறிஸ்தவ "மதம்" எச்சரிக்கை:

அடுத்த தலைமுறைக்கான தன்னலமற்ற சிந்தை இல்லை என்றால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழநாட்டில் கிறிஸ்தவம் அழிந்துவிடும். நம் மிஷனரி முற்பிதாக்கள் செய்த தன்னலமற்ற சேவைகளை (சொந்த சொத்துக்களை விற்று பள்ளிக்கூடம் கட்டுவது, மருத்துவமனைகள் கட்டுவது, எளியவர்களுக்கு உதவிசெய்வது போன்றவற்றை) செய்யாதபட்சத்தில் இப்போது இருக்கும் விசுவாசிகள் வேண்டுமென்றால் பழக்க தோஷத்தில் மதத்தலைவர்களான பாஸ்டர், பாதர்களுக்கு ஜாலரா போடலாம். ஆனால் அடுத்த தலைமுறை இந்த மார்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை நிச்சயம் கேள்விகேட்பார்கள். இங்கே இயேசு சொன்ன அன்பும் பரிவும் தவிர அனைத்தும் நடக்கிறது என்றபோது நான் ஏன் இந்த மதத்தில் இருக்க வேண்டும்? நான் வீட்டிலேயே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாக இருந்துவிடலாமே. தங்கள் வசதிக்காக நிதி திரட்டுவதையும், பெரிய பட்ஜட்டில் பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் யாரையும் தேவன் அவருடைய ராஜ்யத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதே என்னைபோன்றவர்களின் ஜெபமாக இருக்கிறது. மேலும் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய விசுவாசிகளை தங்கள் சுய கட்டுப்பாட்டு வலைக்குள் வைத்திருக்கும் அனைத்து முகத்திரைகளையும் கிழிக்கவேண்டும். அதற்கான காலம் வரும், ஆனால் அது அவ்வளவு மென்மையாக இருக்காது. 

Thursday, August 12, 2021

போலிகளும் காலிகளும் ஆடும் பொம்மலாட்டம்

போலிகளும் காலிகளும் ஆடும் பொம்மலாட்டம்

எதற்கு இந்த பைபிள் ஆராய்ச்சி, ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் எல்லாம். நூற்றுக்கணக்கான நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களிடம் படித்து எழுதப்படும் புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் சிலரால் கூட விரும்பப்படுவதில்லை.

ஆனால் ஒரு கீபோர்ட், கிட்டார் விகுப்பு யாராவது எடுத்தாலோ, அல்லது ஏதாவது நல்ல இயற்கைக்காட்சி விடியோவுடன் கிறிஸ்தவ பாடல்கள் வெளியிட்டாலோ அது மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி விடுகிறது.

நானும் என் நண்பன் ரூபன்-ம் பரிசுத்த வேதாகமம் சம்பந்தமான நூல்களைத் தேடித் தேடி வாங்கிப் படித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. இதற்கென்று நாங்கள் மாதம் ஒரு தொகையை ஒதுக்கிவிடுவதுண்டு. இன்றைக்கு இருக்கும் தலைமுறை வெளிப்புற பகட்டையும், கிறிஸ்தவ ஆராதனை என்னும் பெயரில் நடக்கும் மேடை நாடகத்தையும் அதிகம் விரும்புகிறது. வேத ஆராய்ச்சி, நூல்கள், முற்பிதாக்களின் சாட்சிகள் இவற்றைப்பற்றி ஒருவருக்கும் கவலையில்லை. 

உண்மையான தரம் நம் படிப்பதிலும், கற்றுக்கொள்வதிலும் இருக்கிறது  மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக்கொண்டாள். உண்மையான தரமான விசுவாச சந்ததி உருவாக பெரும் அளவு ஆழமான கற்றல் அவசியமாக இருக்கிறது. போதுமான கற்றல் இல்லாததன் விளைவே, போலிகலும் காலிகளும் ஆடும் பொம்மலாட்டத்தில் விசுவாசிகளை விழவைத்து மாயைக்குள் தக்கவைத்துக் கொள்கிறது.

Sunday, July 4, 2021

ஓநாய்களுக்கு எச்சரிக்கை

ஓநாய்களை இனங்கண்டுகொள்ள நல்ல தருணத்தை ஏற்படுத்திய கர்த்தருக்கு நன்றி. மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. வேத வசனத்திலும் நீதியிலும் புரட்சி எழும்பாவிடில் அனைத்தும் சூறையாடப்படும்.. ஆம்.. அனைத்தும்... முட்டு கொடுத்தே வாழ்ந்து பழகிய விசுவாசிகளே, நாளை அந்திக்கிறிஸ்துவுக்கும் முட்டு கொடுக்க வேண்டி வரலாம். 

எதிர்ப்பு சக்தி இல்லாத விசுவாசிகளை நினைத்து வேதனைப்படுகிறேன். எதிர்ப்பு சக்தியை இழந்தால் நோயால் தாக்கப்படுவது உறுதி. ந#ம் முற்பிதாக்கள் தங்கள் உயிரையும் மதிக்காமல் தவறான ஊழியங்களைக் களைந்து ஏற்படுத்திய நல்ல பாதையில் நடந்தவர்கள், கள்ள ஊழியர்களை உள்ளே அனுமதித்து விட்டு அடுத்த தலைமுறைக்கு எந்தப் பாதையை விட்டுச் செல்லப் போகிறீர்கள்.. 

விசுவாசிகளிடம் பணத்தை சுரண்டும் ஓநாய்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் வஞ்சிக்கும் காலமிது. அனைவரும் சேர்ந்து எதிர்த்தால், தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பது சிலர் மட்டுமென்றால் அவர்கள் மட்டும் அந்த ஓநாய்களால் சபைகளை விட்டு புறம்பாக்கப்படுவார்கள். 

ஒரே ஒரு வசனத்தை நினைவில் கொள்ளுங்கள் (இயேசு, இது போன்ற ஓநாய்களைக் குறித்து சொன்ன வசனம்): அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. (லூக்கா 6 : 44)

#we_stand_with_jesus

Thursday, July 1, 2021

பிரபல கர்த்தருடைய ஊழியர்...

பிரபல கர்த்தருடைய ஊழியர், பணம் நிர்ணயம் செய்து அவருடைய ஆன்லைன் மீட்டிங்-ல் ஆட்களைக் கூட்டினார் என்றும் அதை கேள்விகேட்ட வாலிபனை மிரட்டும் தொனியில் பேசினார் என்பதும் இப்பொழுது சலசலப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவனுடைய ஊழியம் என்பது மக்கள் கட்டணம் செலுத்திப் பெறுவதல்ல என்பதற்கு இயேசுவே நமக்கு முன்மாதிரி. நம்முடைய மிஷனரி முற்பிதாக்களும் தங்களுடைய பொருட்களை எல்லாம் விற்றே இந்த ஊழியத்தை செய்தார்கள் என்பது நம் வரலாறு. ஊழியம் தாங்கப்படுவதற்கு வேதம் புதிய ஏற்பாட்டிலேயே நல்ல முன்மாதிரிகளை வகுத்திருக்கிறது. காலத்திற்கேற்றாற்போல் அவைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தேவ பக்தியை ஆதாயத்தொழிலாக நினைத்து செய்வது பாவம்.

ஆனால் இந்த ஒரு காரியாதைக்குறித்து எந்த ஒரு பெரிய போதகரும் கண்டித்துப் பேசவில்லை. காரணம் பண விஷயத்தில் பலரும் பெரிய உத்தமர்கள் இல்லை. ஒரு ஐ.டி. ரெய்டு விட்டால் பலரும் உள்ளே தான் இருக்க வேண்டும். சீர்திருத்தவாதிகள் போல பேசும் பலரையும் நெருங்கிச் சென்று பார்த்தல், நம்மை மனம் நோகச்செய்யும் செய்யும் பல காரியங்கள் உள்ளே இருக்கும்.
அந்த ஊழியராவது, "ஆமா, நான் என் மக்களிடம் காணிக்கை வாங்கினேன். என்ன தப்பு" என்று கேட்டார். ஆனால் நல்லவர்கள் போல பேசும் பலரும், அதிக காணிக்கை கொடுப்பவர்களை ஒரு விதமாகவும், காணிக்கை கொடுக்க முடியாதவர்களை வேறொரு விதமாகவும் நடத்துவது தேவன் மட்டுமே அறிந்த ரகசியம். காரணம் அந்தப் பொருளாசை "இருதயத்திற்குள்" இருப்பது, அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாது. உள்ளுக்குள் இருப்பதை வைத்து தீர்ப்பு செய்யும் தேவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விடுவோம். தப்பித்துக்கொள்வதும், தங்களுக்கு தெரிந்த பெரிய புள்ளிகளை வைத்து அவரையே மிரட்டுவதும் அவரவர் சாமர்த்தியம்.

Sunday, March 21, 2021

யார் மூத்த குமாரன்?

 யார் மூத்த குமாரன்?

இயேசு, இளைய குமாரன் - மூத்த குமாரன் உவமையைக் கூறும்போது அவர் மனதில் "மூத்த குமாரர்களாக" இருந்தவர்கள் யூத மதவாதத் தலைவர்கள். இந்த உவமையை இயேசு லூக்கா 15:2ல் யூத மதவாதத் தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாகவே சொல்கிறார்.

இவர்களைக் குறித்து வேறு ஒரு இடத்தில் இயேசு சொல்லும்போது, 

நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

லூக்கா 11 : 52

மேற்கண்ட வசனத்தில் பார்க்கும்போது தேவனுடைய ராஜ்யத்தில் உட்பிரவேசிக்கிறவர்களை தடை செய்யும் மதவாதத் தலைவர்களே மூத்த குமாரர்கள்.  அந்த உவமையில் கூட மூத்த குமாரன், இளைய குமாரன் தேவனுடைய வீட்டிற்குள் வருவதை விரும்பவில்லை. இன்றைக்குக் கூட, ஏற்கனவே தேவனுடைய பதவிகளில் இருப்பவர்கள், புதிதாக வளர்ந்து வருபவர்களை பொறாமையினால் ஒடுக்க நினைக்கிறார்கள். குருடன் பார்வையடைந்ததை பரிசேயர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய மார்க்கத்தை மீறி சத்தியம் வெளிச்சத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைக்கும் தேவனுடைய வீட்டிற்குள் பிற மார்கத்தவர்கள் பிரவேசிக்க முடியாததற்குக் காரணம் இந்த பதவிகளில் இருந்து பெயரும் புகழும் கண்டிருக்கும் "மூத்த குமாரர்களே". 

ஆனாலும் கடைசியில், இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்த பலரை, இயேசு கதவிற்கு வெளியே நிற்க வைத்து, "உங்களை அறியேன்" என்று சொல்வார். புதிதாக அவரிடம் வருபவர்களை மூத்த குமாரர்களைத் தாண்டி அவரே ஓடிச்சென்று அரவணைத்துக் கொள்கிறார். 

இன்றைக்கு இருக்கும் நாட்களில் என் நினைவில் வரும் இயேசுவின் வசனம் "அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மத்தேயு 8:11,12"

- முகில்