Sunday, March 21, 2021

யார் மூத்த குமாரன்?

 யார் மூத்த குமாரன்?

இயேசு, இளைய குமாரன் - மூத்த குமாரன் உவமையைக் கூறும்போது அவர் மனதில் "மூத்த குமாரர்களாக" இருந்தவர்கள் யூத மதவாதத் தலைவர்கள். இந்த உவமையை இயேசு லூக்கா 15:2ல் யூத மதவாதத் தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாகவே சொல்கிறார்.

இவர்களைக் குறித்து வேறு ஒரு இடத்தில் இயேசு சொல்லும்போது, 

நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.

லூக்கா 11 : 52

மேற்கண்ட வசனத்தில் பார்க்கும்போது தேவனுடைய ராஜ்யத்தில் உட்பிரவேசிக்கிறவர்களை தடை செய்யும் மதவாதத் தலைவர்களே மூத்த குமாரர்கள்.  அந்த உவமையில் கூட மூத்த குமாரன், இளைய குமாரன் தேவனுடைய வீட்டிற்குள் வருவதை விரும்பவில்லை. இன்றைக்குக் கூட, ஏற்கனவே தேவனுடைய பதவிகளில் இருப்பவர்கள், புதிதாக வளர்ந்து வருபவர்களை பொறாமையினால் ஒடுக்க நினைக்கிறார்கள். குருடன் பார்வையடைந்ததை பரிசேயர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுடைய மார்க்கத்தை மீறி சத்தியம் வெளிச்சத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைக்கும் தேவனுடைய வீட்டிற்குள் பிற மார்கத்தவர்கள் பிரவேசிக்க முடியாததற்குக் காரணம் இந்த பதவிகளில் இருந்து பெயரும் புகழும் கண்டிருக்கும் "மூத்த குமாரர்களே". 

ஆனாலும் கடைசியில், இயேசுவின் நாமத்தில் ஊழியம் செய்த பலரை, இயேசு கதவிற்கு வெளியே நிற்க வைத்து, "உங்களை அறியேன்" என்று சொல்வார். புதிதாக அவரிடம் வருபவர்களை மூத்த குமாரர்களைத் தாண்டி அவரே ஓடிச்சென்று அரவணைத்துக் கொள்கிறார். 

இன்றைக்கு இருக்கும் நாட்களில் என் நினைவில் வரும் இயேசுவின் வசனம் "அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மத்தேயு 8:11,12"

- முகில்


No comments:

Post a Comment