"2022 ஆம் ஆண்டுத் தீர்க்கதரிசனம்" என்று வருபவர்களை கிறிஸ்தவர்கள் யாரும் நம்பிவிட வேண்டாம். அவர்கள் இதற்கு முன் 2020, 2021ல் சொன்னதெல்லாம் நடந்ததா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு பிரபல ஊழியர் 2020-ஐ ஆசீர்வாதமான ஆண்டு என்று முன்னறிவித்தார். அதற்கு எதிர்மாறாகவே அந்த ஆண்டு இருந்தது. கொரோனா பற்றி தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்ளும் யாரும் எதுவும் அந்த ஆண்டில் கணித்துச் சொல்லவில்லை. ஆனாலும் 2021ல் அந்த ஊழியர் என்ன சொல்லப்போகிறார் என்று ஒரு பெரிய வஞ்சிக்கப்பட்ட கூட்டம் பார்த்துக்கொண்டு ஆமென் சொல்லிக்கொண்டு தான் இருந்தது.
அடுத்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்றெல்லாம் சொன்னார்கள். அதற்கு தீர்க்கதரிசி தேவையில்லை. ஊடகங்களில் வரும் அரசியல் விமர்சகர்கள், கணிப்பாளர்கள் போதும்.
மக்களே, நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அதிலேயே நமக்கான தீர்க்கதரிசனம் உள்ளது. உங்களுக்கான திட்டம் என்ன என்பதை நீங்கள் தேவனிடம் கேட்டுப் பெறுங்கள். தனியாகவும் கூட்டமாகவும் ஜெபம்செய்து ஆண்டவருடைய வார்த்தையைப் பரிமாறிக்கொள்ளுங்கள். கள்ளத் தீர்க்கதரிசிகளின் வாயைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம். கண்டவனிடமும் தலையைக் கொடுக்கவும் வேண்டாம்.
உங்களுக்கு இம்மைக்குரிய ஆசிகளைக் காட்டி, கர்த்தர் வீடு தருவார், கார் தருவார் என்று சொல்பவர்களை விட்டு விலகுங்கள். அதெல்லாம் தர வேண்டியது நம் தகப்பனின் கடமை. அவரைத் தேடும்போது நமக்கு அனைத்து நன்மைகளையும் தர அவர் போதுமானவர்.
"என் வாழ்க்கையில் நடந்ததை அப்பிடியே சொல்லிட்டாரு" என்று யாரையும் நம்ப வேண்டாம். அவர் வேறு ஆவியை உடையவராகவும் இருக்கலாம்.
ஒரு தீர்க்கதரிசியை கண்டறிய அவருடைய வாழ்கையைப் பாருங்கள். ஆனாலும் தேவன் உங்கள் அனைவரிடமும் பேசுவார், எனக்கும் தேவனுக்கும் கிறிஸ்து ஒருவர் தவிர மத்தியஸ்தர் இல்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
அருள் ஏராளமாய்ப் பெய்யட்டும்!
No comments:
Post a Comment