உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்
வனாந்திரத்திலிருந்து சத்தம் - பகுதி 1
"சொந்த நாட்டு மக்கள் கஷ்டப்படும்போது ஒரு நாட்டின் தலைவன் பல லட்ச ருபாய் உடைகளை உடுத்தி, கேமரா கலைஞனை பின்னால் வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது, பறவைகளுக்கு உணவளிப்பது என காணொளிகளை வெளியிட்டால் அவன் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவனாக இருப்பான்?" எனப் பதிவிட்ட பாஸ்டர்களே!
மக்கள் துயரத்தில் மூழ்கியிருக்கும் போது, உங்கள் சொந்த சபை மக்கள் நெருக்கத்தில் இருக்கும்போது, லட்சங்களில் பணத்தை செலவழித்து இசையமைப்பாளர்களுக்கும் வீடியோகாரர்களுக்கும் கூலி கொடுத்து, வார்த்தைகளில் கர்த்தரையும், மனதில் உங்கள் புகழையும் பாடிக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படிப்பட்ட சேடிஸ்ட் மனநிலை கொண்டவர்களாக இருப்பீர்கள்?
ஏசாயா மூலம் கர்த்தர் உரைத்தபடி, "உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். (ஏசாயா 1: 16, 17)"
இன்றைய தேவை எது? உங்கள் புகழ் பாடுவதா? புதிய உங்கள் பாடல் மூலம் தான் கர்த்தரை மக்கள் துதிக்க வேண்டுமா? இதுவரை வந்த லட்சக்கணக்கான பாடல்கள் மூலம் இந்த தேசம் என்ன எழுப்புதலைக் கண்டது? உங்களுக்கு புகழையும் ஆடம்பரத்தையும் மட்டுமே சேர்த்துக்கொடுத்தது.
மறைவிடங்களை விட்டு வெளியே வந்த எலியா, ஆகாப் ராஜா முன்பாக தன்னைக் காண்பித்தான். நீங்களோ மறைவிடங்களை விரும்பாமல், இந்த தீங்கு நாட்களிலும் வீடியோ முன்பாக நடித்து, மக்களுக்கு உங்களை பக்தியுள்ளவர்களாகக் காண்பிக்கிறீர்கள்.
கத்தோலிக்கர்கள் சிலைகளை வழிபடுகிறார்கள் என்று சத்தியத்தில் புரட்சி செய்த சீர்திருத்த சபையைச் சேர்ந்த விசுவாசிகளே! நீங்கள் ஆராதனை பாடல்களில் நடிப்பவரை உங்களை அறியாமலே ஆராதித்துக்கொண்டிருக்கிறீர்களா என்பதை சிந்தித்துப்பாருங்கள். ஒருவனுடைய சாட்சி, வாழ்க்கை முறை எதையுமே அறியாமல் எதன் அடிப்படையில் அவனை கமெண்டில் மெச்சிக்கொள்கிறீர்கள்? இதைத்தான் நம் சீர்திருத்த சபையின் தகப்பன் மார்ட்டின் லூதர் சொல்லிக்கொடுத்தாரா?
சிந்தித்து செயல்படுங்கள், செயல்பட முடியாத காலம் உங்கள் முன்னால் இருக்கிறது. நீங்கள் உடைப்பது எதுவோ அதை உங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் சரிசெய்ய எவ்வளவு போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். உங்கள் சுய பிரபலமாக்குதலையும் தனிமனித துதிபாடுதலையும் விட்டுவிடுங்கள். நீதியைச் செய்து, அதன் விளைச்சலை நம்மிடம் விட்டுச்சென்ற நம்முடைய பிதாக்களைப் போல, நீதியை விதைத்துப்பழகுங்கள். அடுத்த தலைமுறைக்கு நீதியின் விளைச்சலை பரிசாகக் கொடுங்கள்.
- முகில்
No comments:
Post a Comment