Tuesday, January 25, 2022

My email to Hon. Chief Minister of Tamilnadu regarding minority abuse

Chief Minister of Tamil Nadu M. K. Stalin 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

தமிழ்நாட்டில், ஒரு சிறுமியின் மரணத்தை வைத்து நடக்கும் மத அரசியல், அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பற்றி அரசியல்வாதிகளால் பேசப்படும்  அவதூறான கருத்துக்கள் ஆகியவற்றை மிக ஆபத்தாக உணர்கிறேன்.

சில நாட்களுக்கு முன் பிற மதத்தை இழிவுபடுத்தியதாக ஃபாதர் ஜார்ஜ் பொன்னையா, கருப்பர் கூட்டம் நாத்திகன் ஆகியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் மதம் சார்ந்த  விமர்சனங்களை "உணர்வுகள்  புண்படும்" பிரச்சனைகளாகப் பார்கும் மனநிலையால், பொதுவாக பிற மதம் சார்ந்த விமர்சனங்கள் பொதுவெளியில் தவிர்க்கப்படுகிறது. 

ஆனால், இன்றைக்கு சமூக வலைதளங்களிலும், மேடைகளிலும் கிறிஸ்தவ மதம் பற்றி பரப்பப்படும் அவதூறு, கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கியுள்ளது. இதுவரை கிறிஸ்தவர்களை அவதூறாகப் பேசினால் யாரும் கேட்பதற்கு இல்லை என்ற மனநிலையே சிலரிடம் நிலவுகிறது. கருத்தியல் ரீதியாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். அதே வேளையில் சிலர், கல்வி, சுகாதாரம் மற்றும் சமுதாயப் பணிகளைச் செய்த எங்கள் மிஷனரி முற்பிதாக்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதும், தேவ ஊழியர்களை உடை ரீதியாக இழிவுபடுத்துவதும் எங்கள் மார்க்கத்துக்குக் களங்கம் ஏற்படுத்துவது போல் உள்ளது.

ஏற்கனவே சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சபைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். அப்போது நீங்கள் கூட சட்டமன்றத்தில் அதற்காக குரல் எழுப்பினீர்கள். அதைத் தொடர்ந்து பதில் அளித்த அன்றைய துணை முதல்வர் திரு. ஓ.பி.எஸ். அப்படிப்பட்ட வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிலளித்தார். ஆனாலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது. பின் நாட்களில் கொரோனா ஊரடங்கு வந்து எங்களைக் காப்பாற்றியது என்றால் அது மிகையாகாது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைந்தவுடன், அதற்கு முன்னிருந்தே உச்சத்தில் இருந்த கொரோனா பெருந்தொற்றில் "மத வெறி, மத துவேஷம்" ஆகிய பெருந்தொற்று நோய்கள் மறைந்திருந்தது. ஆனால் இன்றைக்கு பொது வெளியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிலவும் இந்தக் கருத்தியல், உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாமல், வன்முறையின் விஷ விதைகளாக உருவெடுத்துள்ளது என்று உணர வைக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் கோவை ராமநாதபுரம் பகுதியில் ஒரு தேவாயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

மேலும் நம்முடைய இந்திய நாட்டில்,  ஹரித்துவார் என்னும் இடத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த விஷமப் பேச்சுக்கள், அமெரிக்காவின் "Genocide Watch" என்னும் நிறுவனத்தின் மூலம் வெளிவந்த இந்தியாவைக் குறித்த எச்சரிக்கை போன்றவை, எங்களை அசாதாரண மனநிலைக்குத் தள்ளுகிறது. 

தமிழ்நாட்டின் முதல்வராகிய நீங்கள் அந்தப் பள்ளி மாணவியின் மரணத்தின் உண்மையைக் கண்டறிந்து மாணவிக்கு நீதி வழங்குவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் அவதூறுப் பேச்சுக்களை கட்டுப்படுத்தி, சிறுபான்மை மக்களுக்கு அமைதி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே வேளையில் தன்னலமின்றி சேவை செய்யும் பாரம்பரியமான கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம், நம்பிக்கை சம்பந்தமாக நம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் அடிப்படைச் சுதந்திரத்தை உறுதி செய்து, பிறருக்கு பாதிப்பு இல்லாமல் எங்கள் இறைப்பணியை நாங்கள் செய்ய அமைதியான சூழ்நிலையைத் தந்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து முறைப்படி தங்கள் தனிப்பிரிவுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

அன்புடன்,

முகில்,

கோவை.

No comments:

Post a Comment