Saturday, February 22, 2020

நம்முடைய யுத்தம் முடியவில்லை

நம்முடைய யுத்தம் முடியவில்லை

நம்முடைய யுத்தம் கல்வாரி சிலுவையில் முடிந்துவிட்டதாக ஆன்ரு வாம்மேக் என்னும் ஊழியர் எழுதிய புத்தகத்தைப் பிடிக்க நேர்ந்தது. முழுமையான வேதத்தைப் புரிந்து கொண்ட யாரும் அவருடைய கூற்றுகளை ஏற்றுக்கொள்வதில்லை.

மனுக்குலத்திற்கு விரோதமாக இடப்பட்டிருந்த கட்டளைகளை இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார். அதாவது நியாயப்பிரமானம் என்பதை செல்லாக் காசக்கி, அன்பு என்னும் புதிய பிரமானத்தை மனித குலத்திற்கு வகுத்துக் கொடுத்தார். (கொஞ்சம் ஆழமாக கொலோசெயர் 2:13-15ஐ படிக்கவும். புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்).

நம்முடைய போராட்டங்கள் முடியவில்லை என்றும், அந்த போராட்டங்களை ஆவியின் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது. (எபேசியர் 6 : 12-17)

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத சரீரம் எப்படி சாக நேரிடுமோ, அது போலவே, ஆவிக்குரிய போராட்டங்களை எதிர்கொள்ள முடியாதவர்களும் ஆவிக்குரிய மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஆனால், கிறிஸ்துவின் பிரமாணம் யுத்தத்தில் வெற்றி பெற வழியையும், தேவனுடைய ஆவியானவர், யுத்தத்தை எதிர்கொள்ள பெலனையும் தருகிறார். ஆவிக்குரிய யுத்தத்தில் தேவன் ஒருவரையும் தனித்து விடுவதில்லை.

ஆனால், தூக்கம், உணவு, சோம்பல் மற்றும் கொஞ்சம் விசுவாசம் சேர்த்துக் கொண்டு, எனக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நினைப்பவர்களுக்கு, வெற்றியின் கனியை ஆன்ரு வாம்மேக் செலவு செய்து வாங்கிக் கொடுப்பார் என்றால், எனக்கு ஆட்சேபனை இல்லை. 

Friday, February 21, 2020

இயேசுவின் அன்பைப் பெற்றால் மட்டும் போதுமா?

இயேசுவிடம் நித்திய ஜீவனைக் குறித்து கேள்வி கேட்டான் ஒரு பணக்கார வாலிபன்.

"நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று.

இயேசு அவனிடம் அன்புகூர்ந்து, அவனிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின்பு தன்னை பின்பற்றி வரச்சொன்னார்.

ஆனால் அந்த வாலிபன் இந்த கண்டிஷன் பிடிக்கமல், துக்கத்தோடு போய்விட்டான்.

இயேசு அவனிடம் அன்புகூர்ந்தார். ஆனால் அவனோ தன் சொத்தை அதிகமாக நேசித்தான்.

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. வாழ்க்கையில் இயேசுவின் அன்பைப் பெற்றால் மட்டும் போதாது. அவர் எதிர்பார்க்கும் காரியங்களை நம்மிடம் இருந்து விட்டகற்ற வேண்டும். அப்போது தான் நித்திய ஜீவனை உத்தரவாதமாகச் சொல்லமுடியும். 

Wednesday, February 19, 2020

பாவிகளுக்கு வைத்தியன் இயேசு

தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை. ஒருவகையில் பார்த்தால், குறைந்த அளவில் தவறு செய்தவர்களை விட, அதிக அளவில் தவறு செய்தவர்கள், அதிலிருந்து மனந்திரும்பும்போது மீண்டும் அந்தத் தவறுகளை செய்வதற்கான வாய்ப்பு குறைவு.

இன்றைக்கு இருக்கும் ஒருவனுடைய வீழ்ச்சியை வைத்து தீர்ப்பு செய்வது மனிதனுடைய சுபாவம். ஆனால் தேவனோ, பாவத்தில் வாழ்பவர்களை தீர்ப்பு செய்வதற்கு முன் வாய்ப்புகளைத் தருகிறார்.

இயேசு, அந்த வழியில், பெரிய நீதிமான்களைக் குறித்து அதிக கவலைப்படாமல், பாவிகளிடமே தன் ஊழியப் பயணத்தைத் தொடங்குகிறார். அதில் அவரால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, விசுவாசம் என்னும் நூலில் சந்ததியாகக் கட்டப்பட்டு கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருக்கிறோம்.

*இயேசு : பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை, நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்.

மாற்கு 2:17*