Monday, September 21, 2020

தேவ வார்த்தையும் மனிதனுடைய உபதேசங்களும்

ஒரு காலத்தில் டிவி வீட்டில் இருந்தாலே பாவம் என்று பிரசங்கம் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு டிவி, மீடியா வழியே பல ஊழியங்கள், சபை ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

பல சபைகளில் (இன்றைக்கும்) காதல் திருமணம் செய்பவர்களை சமூகத்தில் உள்ள தீய சக்திகளைப் போல பாவிப்பதுண்டு. ஆனால் அதே சபைகளில் ஜாதி மற்றும் வரதட்சணை கேட்டு நடத்தப்படும் திருமணங்களை வெள்ளைகொடி காட்டி வரவேற்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.

இதே போல் தான் வெள்ளைச்சட்டை போடுவது, நகை அணிவது, முக்காடு போடுவது, மீசை தாடி எடுப்பது, சினிமா பார்ப்பது என்று மிஞ்சின பிரசங்கங்கள். பாவங்களை வேதத்தில் சொல்லப்பட்ட அளவில் சொல்வது தான் சரி. தொடாதே, சாப்பிடாதே, பார்க்காதே என்று சொல்லும் பிரசங்கங்களால் ஒரு பயனும் இல்லை. 

இனியாவது மனுஷ கற்பனைகளை (வெளியரங்கமான மாற்றங்களை) மேன்மைப்படுத்திப் பேசாமல் உள்ளான மாற்றத்தை பேச வேண்டும். வேதத்தில் விபச்சாரம் தவறு என்று சொன்னால், முழு உலகத்திற்கும் அது தவறுதான். அதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் மனிதர்கள் உருவாக்கிய கற்பனைகள் அப்படியல்ல. மனிதனுடைய உபதேசங்களால் நிறைந்த ஒரு பிரசங்கத்தை, ஒரு பத்து வருடம் கழித்து கேட்டால் அதிகபட்சமாக இருக்கும் (உதாரணம் டிவி வீட்டில் வைத்திருப்பது, ஸ்மார்ட் போனில் பைபிள் படிப்பது).

விபச்சாரம் செய்வதும், வெள்ளைச்சட்டை போடாமல் சபைக்கு வருவதும் பாவம் என்று சொல்லும்போது இரண்டிற்கும் ஒரே அழுத்தம் தரப்படுகிறது. இது தேவ கட்டளைகளுக்கு இணையாக மனுஷ உபதேசங்களை வைப்பது போன்றது. வேதத்தில் கூட்டினாலும் தவறு, குறைத்தாலும் தவறு.

ஏவாள் வஞ்சிக்கபட்டதில் மூன்று நிலை இருக்கிறது (Adding, Altering, Avoiding). தேவனுடைய கட்டளைகளோடு கூட்டுவது, அதை மாற்றுவது, அதை நிராகரிப்பது (நன்றாக ஏவாள் - சாத்தான் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாக படித்தால் புரியும்). 

வேத வார்த்தைகளில் ஒன்றும் கூட்ட வேண்டாம், குறைக்கவும் வேண்டாம். ஆலோசனைகளை சொல்லலாம், சொல்ல வேண்டும். ஆனால் அவை சூழ்நிலையை பொறுத்து மாறும். வேதாகமத்தில் உள்ள கட்டளைகளோ எந்த நிலையிலும் மாறாது. 

நன்றி,

சகோதரன் முகில்.

2 comments: