Tuesday, October 6, 2020

இந்த உலகத்தின் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி என்றைக்காவது யோசித்ததுண்டா?

என்றைக்கு வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம், போர் மூலமாகவோ, ராணுவத்தின் மூலமாகவோ, இயற்கைப் பேரிடர் மூலமாகவோ எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற நிலையில் உள்ள மனிதர்கள்...

எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை என்ற நிலையில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை 12 மில்லியன் (கணக்கிடப்பட்டவை மட்டும்)

அமைதியான வாழ்க்கை வாழும் நான் அதற்காக எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அமைதியற்ற இடத்திலேயே பிறந்து வாழும் அவர்களும் பாவம் செய்ததால் அங்கே இல்லை. 

இந்த நிலையில் ஜான் கால்வின் அவர்களின் சில கோட்பாடுகளையும் சிந்திக்க வேண்டியுள்ளது. எல்லாமே அங்கே தீர்மானிக்கட்டதென்று!

மனிதன் மரித்தபின் வாழ்கிறான் என்பது அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. பைபிள் அந்த வாழ்க்கைக்கு சில வரையறைகளை வைக்கிறது. அதில் ஒரு வகை பிரசங்கக் குறிப்புகளில் கண்டிராத ஒன்று.

லாசரு! இவனுக்கு உடம்பெல்லாம் பருக்கள், ஒரு வேளை கூட வயிறார உண்ண முடியாத நிலை. இவன் இறந்தபின் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறான். அதற்கு பைபிளில் சொல்லப்பட்ட ஒரே காரணம், அவன் உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் துன்பப்பட்டான், ஆதலால் இப்பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்பதே!

நம்முடைய பிரசங்க அறிவு கூட சில நேரங்களில் தேவனையே மிஞ்சி விடுகிறது. குறிப்பு எடுத்து பிரசங்கம் செய்வதை விட அவரைப் புரிந்து கொண்டு பிரசங்கம் செய்வதையே விரும்புகிறேன். கூடுமானால்.. 

அவரைப் பார்த்து பிரம்மிக்கும் போது யோபுவால் பேச முடியவில்லை. அவருடைய கேள்விகள் ஒன்றிற்கும் யோபுவிடம் பதில் இல்லை. 

அவருடைய மகிமையைக் கண்டபின் அன்பின் சீஷன் செத்தவனைப் போல பாதத்தில் விழுந்தான். அவருடைய மகிமையைக் காணாமலே நமக்கு இவ்வளவு பெருமைகளா!

எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தினமும் கற்றுக்கொள்கிறேன், அவரை அறிய, அவரைப்பற்றியே, அவர் பாதத்தில்! 

சகோதரன்,

முகில்.

No comments:

Post a Comment