Tuesday, September 21, 2021

ஆபத்தான கலர் சாயம்

 நல்ல பரிசுத்தவான்களாக இருப்பது நல்லதுதான். ஆனால் சிலர், தங்கள் ஆவிக்குரிய நிலைக்கு மாறாக (அதை மிஞ்சி) தங்களை வெளிப்படுத்த முயல்வது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது. நான் எந்த அளவுக்கு பரிசுத்தவானோ அந்த அளவுக்கு இந்த உலகம் என்னை அறிந்தால் போதுமானது. என்னை தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் நான் ஒரே மாதிரியான மனிதன் தான். தூரத்தில் என்னை பார்த்துவிட்டு என்னுடைய பொய்யான பிரதிபலிப்பை நம்பி என்னிடம் நெருங்கும் போது என் உண்மை வெளிப்பட்டு விடும். அதன் விளைவாக ஒருவரைக்கூட வாழ்நாள் நண்பனாக ஆதாயப்படுத்த முடியாது. 

அதற்காக நான் பெரிய பாவி, நான் மிக மோசமானவன் என்று சொல்வது ஓவர் பில்டப்பாகத் தெரியும். அது உண்மைக்கு மாறானதாக இருக்கும். எப்போதும் உண்மையையே பேசினால் நம் நிலை குறித்த தடுமாற்றம் பிறருக்கு வராது. முகமூடி என்றைக்கும் ஆபத்தானது தான். இங்கே பல லட்சங்கள் செலவு செய்து அணியப்படும் முகமூடி ஒரு இமைப்பொழுதில் எளிதில் கிழிந்துவிடும். அது காணொளியின் முகப்பில் உள்ள படத்திற்கும் காணொளிக்கும் தொடர்பில்லாததைப்போன்றது. 

அதுபோலவே புகழ்ச்சி என்பதும் இயல்பானதாக இயற்கையானதாக நமக்கு வரவேண்டும். செயற்கையாக நம்மைத் தூக்கிக்காட்டும் விளம்பரங்கள் நம்மை குறுகிய காலத்தில் உயர ஏற்றிவிட்டாலும் உண்மை வெளிப்படும்போது நொடிப்பொழுதில் அது நம்மைத் தாழத் தள்ளிவிடும்.

பின்குறிப்பு : நான் யாரையும் சொல்லல.

  

Saturday, September 18, 2021

பெண்ணைப் பெற்றவருக்கே வரதட்சணை தர வேண்டும்

 யூத கலாசாரத்தில் திருமணம் செய்யும்போது மணமகன் வீட்டார் மணமகளுடைய வீட்டாருக்கு அவளை வளர்த்த செலவை தந்துவிட வேண்டும். மேலும் ஆண்மகன் தான் பெண்ணுக்கு நகை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும். இது மிகச்சிறந்த திருமண முறையாகும். 

ஆனால் இன்றைய நாட்களில், இத்தனை ஆண்டுகள் பெண் பிள்ளைகளை வளர்த்த பெற்றோருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரதட்சணை என்னும் பெயரில் பகல் கொள்ளையடிப்பது எவ்விதத்தில் நியாயம்? இன்னொருவர் உழைப்பை/பொருளைப் பெறும்போது அதற்கான விலையைச் செலுத்தி அதைப் பெறுவதே நியாயம். பெண் என்பவள் வேலைக்குச் செல்வது, வீட்டு வேலை செய்வது, பிள்ளை பெற்று வளர்ப்பது என பல விஷயங்களில் நன்றாக விளங்கும் போது, திருமணத்தில் அவளுக்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.

Thursday, September 2, 2021

உருமாறிய கிறிஸ்தவ "மதம்" எச்சரிக்கை

 உருமாறிய கிறிஸ்தவ "மதம்" எச்சரிக்கை:

அடுத்த தலைமுறைக்கான தன்னலமற்ற சிந்தை இல்லை என்றால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழநாட்டில் கிறிஸ்தவம் அழிந்துவிடும். நம் மிஷனரி முற்பிதாக்கள் செய்த தன்னலமற்ற சேவைகளை (சொந்த சொத்துக்களை விற்று பள்ளிக்கூடம் கட்டுவது, மருத்துவமனைகள் கட்டுவது, எளியவர்களுக்கு உதவிசெய்வது போன்றவற்றை) செய்யாதபட்சத்தில் இப்போது இருக்கும் விசுவாசிகள் வேண்டுமென்றால் பழக்க தோஷத்தில் மதத்தலைவர்களான பாஸ்டர், பாதர்களுக்கு ஜாலரா போடலாம். ஆனால் அடுத்த தலைமுறை இந்த மார்க்கத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை நிச்சயம் கேள்விகேட்பார்கள். இங்கே இயேசு சொன்ன அன்பும் பரிவும் தவிர அனைத்தும் நடக்கிறது என்றபோது நான் ஏன் இந்த மதத்தில் இருக்க வேண்டும்? நான் வீட்டிலேயே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாக இருந்துவிடலாமே. தங்கள் வசதிக்காக நிதி திரட்டுவதையும், பெரிய பட்ஜட்டில் பிரம்மாண்டமான ஆலயம் கட்டுவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் யாரையும் தேவன் அவருடைய ராஜ்யத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதே என்னைபோன்றவர்களின் ஜெபமாக இருக்கிறது. மேலும் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய விசுவாசிகளை தங்கள் சுய கட்டுப்பாட்டு வலைக்குள் வைத்திருக்கும் அனைத்து முகத்திரைகளையும் கிழிக்கவேண்டும். அதற்கான காலம் வரும், ஆனால் அது அவ்வளவு மென்மையாக இருக்காது.