Sunday, February 28, 2021

பகுதி 2 - ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம்

ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம் - பகுதி 2 (முழுதும் படிக்கவும், இரவும் பகலும் ஆராய்ந்து நம் பிழையான உபதேசத்தை நம்பக் கூடாது என்பதால் பாரத்தோடு எழுதுகிறேன்)

ரகசிய வருகை என்பது பிசாசின் உபதேசம் என்று போன கட்டுரையில் எழுதியிருந்தேன். இப்போதும் அதைத் தான் எழுதுகிறேன். ஏனென்றால் வேத வசனத்தை மீறும் எந்த உபதேசத்தையும் இதற்கு மேல் மரியாதையாக எழுத முடியாது. இதே "பிசாசின் உபதேசம்" என்னும் வார்த்தை வேதத்திலும் இருக்கிறது. (1 திமோத்தேயு 5:4). கோபப்படாமல் தொடந்து படியுங்கள். கர்த்தர் உங்கள் கண்களை திறப்பாராக. தொடராக எழுதலாம் என்று இருக்கிறேன்..

திருடனைப் போல வருகிறேன் என்ற வார்த்தை "விழித்திராதவர்களுக்கு / இருளில் நடப்பவர்களுக்கு" என்பதை வேதத்தில் "திருடனைப் போல" என்று சொல்லப்பட்ட நான்கு இடங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இது சபைக்கானது அல்ல என்பதும் தெளிவாக இதே இடத்தில் (1 தெசலோனிக்கேயர் 5) சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு அவர் திருடன் அல்ல, மணவாளன்.. 

இப்போதைக்கு உயிர்தெழுதல் / சபை சேர்த்துக்கொள்ளப்படுதல் என்னும் காலத்தை கீழ்கண்ட இந்த வசனத்தை ஆதாராங்களோடு பார்க்கலாம்.

"ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 

1 தெசலோனிக்கேயர் 4: 16-17"

இங்கே மூன்று சத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் கர்த்தருடைய ஆரவாரம் முக்கியமானது. அவருடையவர்கள் அவர் சத்தத்தைக் கேட்பார்கள் என்பது இயேசுவின் வார்த்தை (யோவான்10 : 27).  அவருடைய மனவாடிக்கும் வருகையின் எச்சரிப்பு பிரதான தூதன் (மிகாவேலாக இருக்கலாம்) மூலமாகவும், தேவ எக்காளம் மூலமாகவும் தரப்பட்டும். எக்காளம் என்றாலே வரும் காரியத்தை மக்களுக்கு அறிவிப்பதற்குத் தானே.

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 

மத்தேயு 25:6"

இங்கே சத்தம் கேட்கப்பட்டாலும் புத்தியில்லாத கண்ணிக்கைகள் மனந்திரும்பியும் அவருடைய வீட்டிற்குள் பிரவேசிக்க முடியவில்லை. இதே போல் தான் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்ட ஏசா கண்ணீர் விட்டு கவலையோடு தேடியம் பலன் கிடைக்கவில்லை என்று வேதம் சொல்கிறது. (எபிரேயர் 12:16)

மேற்கண்ட  தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட வசனத்தில், "கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மேல்" என்பதை சிந்தித்துப் பாருங்கள். "மேகங்கள் மேல்" என்கிற வார்த்தை வேறு சில இடங்களிலும் இருக்கிறது. சபைகளுக்கு யோவான் இதைத் தான் எழுதுகிறார்.

"இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:7"

ஆம். இயேசுவின் பகிரங்க வருகையில் தான் உயிர்த்தெழுதல் நடக்கும். கண்கள் யாவும் அவரைக் காணும் என்பது எப்படி ரகசிய வருகை ஆகும்? பின்பு தான் சபை எடுத்துக்கொள்ளப்படும் (மொத்த சபையும் என்று நினைக்க வேண்டாம், புத்தியுள்ள கண்ணிக்கைகள் மட்டுமே, கடைசி அடையாளங்கள் நடக்கும் போது மனந்திரும்பி விடலாம் என்று நினைத்தால்.. வாய்ப்பில்ல ராஜா, இருதயங்கள் எல்லாம் தேவனுக்குத் தெரியும்).

இதே சம்பவத்தைத் தான் வெளிப்படுத்தின விசேஷம் 14:14 ல் பார்க்க முடிகிறது. பின்பு தான் இயேசு உவமைகளாகச் சொன்ன அறுவடை நடக்கிறது.

இதே சம்பவம் தான் வெளிப்படுத்தின விசேஷம் 6ஆம் அதிகாரத்தின் கடைசியிலும்,7ஆம் அதிகாரத்திலிலும் நடக்கிறது. "அவருடைய மகா கோபாக்கினையின் நாள் வந்துவிட்டது" என்று பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்பிய" பின் தான் மகா உபத்திரவத்தில் இருந்து வந்த பெருங்கூட்ட ஜனம் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறது. அந்த மகா உபத்திரவம் பற்றி ஐந்தாம் முத்திரை உடைக்கப்படும் போது ஆண்டவரே சொல்கிறார். முதலாம் முத்திரையிலேயே அந்திகிறிஸ்து போன்ற ஒருவனை வெள்ளைக் குதிரையில் பார்க்க முடிகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 6,7 தான் யோவானின் அடுத்த தரிசனத்தில் வேறு பார்வையில் காட்டப்பட்டிருக்கிறது. குறைந்தது மூன்று தரிசனங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தில் இருக்கிறது. முதல் இரண்டு தரிசனங்களும் தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்படுவதை ஒட்டி முடிகிறது. இது என் பார்வை தான். வேறு பார்வைகளில் படித்தாலும் ரகசிய வருகை இருக்காது. காரணம் அது வேதத்திற்குப் புறம்பானது. இதைத் தனியாக வேறு கட்டுரையில் எழுதுகிறேன்.

மத்தேயு 24:30ல் இயேசு மேகங்கள் மேல் வருக்கிறதை அவரே சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பகுதியில் "சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்" என்று அவரே சொல்லியிருக்கிறார். 

இந்த ரகசிய வருகைப் பிரசங்கியார்கள் சிலர் (அனைவரையும் தவறு சொல்லவில்லை) ஒருவேளை, இயேசு இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று சொல்லக்கூடும். உபதிரவ காலத்தில் மக்களை வேறு ஒரு இயேசுவின் பக்கம் திருப்பி விட வாய்ப்பு இருக்கிறது என்பதை வருத்தத்தோடும் பாரத்தோடும் பதிவிடுகிறேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. இயேசுவே சொல்லியிருக்கிறார். 

"அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 

இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 

ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். 

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 

மத்தேயு 24 : 23 - 28"

இயேசு சொன்ன மேற்கண்ட வசனப்பகுதிகளில் உள்ள சாரம், "ரகசியமாக இயேசு வரமாட்டார், மின்னல் பிரகாசிக்கிறது போல் தான் வருவார்" என்பதே.

நீங்கள் இதுவரை ரகசிய வருகையை நம்பியிருந்தால், நான் சொல்வதினிமித்தம் அல்ல. இயேசு சொல்வதினிமித்தம் இந்த கள்ள உபதேசத்தை விட்டு வெளியே வாருங்கள்.

பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்பது ஆழமான வார்த்தை. இதிலும் இரகசிய வருகை இல்லை என்பது நிரூபணமாகும். ஆனால் இதை பின் வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

மாற்றுக்கருத்து இருந்தால் தெளிவாக மேற்கண்ட வசனங்களை ஆராய்ந்து விட்டு,  வசனத்தோடு கருத்தைப் பதிவிடுங்கள். வீண் விமர்சனங்களுக்கு, தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.

- முகில் 

No comments:

Post a Comment