Thursday, February 25, 2021

ரகசிய வருகை என்னும் பிசாசின் உபதேசம் - தப்பித்துப் பறந்து போவதையா இயேசு சொல்லிக்கொடுத்தார்?

*"ரகசிய வருகை" என்னும் பிசாசின் உபதேசம் - தப்பித்துப் பறந்து போவதையா இயேசு சொல்லிக்கொடுத்தார்?*

இதைக் கொஞ்சம் படியுங்கள்.. ரகசிய வருகை இல்லை என்பதற்கான வசன ஆதாரங்கள்... 

1800களில் ஜான் டார்பி நெல்சனால் சபைக்குள் திணிக்கப்பட்டது தான் இந்த இரகசிய வருகை என்னும் கோட்பாடு. அதே காலகட்டத்தில் Milleric Movements என்று சொல்லப்படக்கூடிய  பல பிழையான உபதேசங்கள் சபைக்குள் திணிக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு உபதேசம் (Pre-Tribulation Rapture) வேதத்திலும் இல்லை, சபை சரித்திரத்திலும் 1800 வரை இல்லை. உபத்திரவம் முடிந்தவுடன் தான் இயேசுவினுடையவர்கள் அவரிடத்தில் கூட்டி சேர்க்கப்படுவார்கள். இது மத்தேயு 24ல் இயேசுவே சொன்னது. இதே சம்பவம், இயேசு சொல்லியிருக்கிறபடி அறுவடையின் உவமையாக வெளிப்படுத்தின விசேஷம் 14ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த உவமையை இயேசு தெளிவாக மத்தேயு 13ஆம் அதிகாரத்திலும் சொல்லியிருக்கிறார். "அறுப்பு உலகத்தின் முடிவு! அறுக்கிறவர்கள் தேவ தூதர்கள்" மத்தேயு 13:39.

மேகங்கள் மேல் இயேசு வர வேண்டும். பிறகு தான் சபை அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். இதே சம்பவம் தான் வெளிப்படுத்தின விசேஷம் 7ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு பகுதிகளிலும், முந்திய வசனங்களில் இயேசு மேகங்கள் மேல் தோன்றுவதைப் பார்க்கமுடிகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 6:16,17 - பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலப்புகிறார்கள்.. இதே சம்பவம் வேறு எங்காவது இருக்கிறதா? ஆம். இருக்கிறது. இயேசு சொன்னாரே... மத்தேயு 24:30ல் இரண்டு பகுதிகளிலும்

"பூமியில் உள்ள சகல கோத்திரத்தாரும்", "கண்டு புலம்புவார்கள்" என்பதும் ஒத்துப் போகிறது. இரண்டும் ஒரே சம்பவம் தான். வெளிப்படுத்தின விசேஷம் 14:14ல் மனுஷகுமாரன் மேகத்தில் தோன்றிய பிறகே அறுவடை நடக்கிறது! இதுவும் அதே சம்பவம் தான்.

திருடனைப் போல வருகிறேன் என்பதன் அர்த்தம் என்ன?

வேதமே இதற்கான அர்த்தத்தை விளக்குகிறது. 1 தெசலோனிக்கேயர் 5:1-8. வாசித்துப் பாருங்கள். திருடனைப் போல வருவது என்பது விழித்திராதவர்கள் மேல் சடுதியாக அவர் வருவது. விழித்திருந்தால் திருடன் எப்படி வர முடியும்? நமக்கோ அவர் திருடன் அல்ல. மணவாளன். திருடன் கொல்வான், அழிப்பான். மணவாளன் நம்மை நித்திய ஜீவனை தந்து நம்மை பரிபூரணப் படுத்த வருகிறவர் (யோவான் 10:10). இதைத் தனியாக விளக்கலாம்.

உபத்திரவத்தை சபை கடந்து செல்லும்போது, அது பாக்கியமாக என்னப்படுகிறது. இதை சபை சரித்திரம் நமக்குச் சொல்கிறது. உபத்திவம் நமக்குப் புதிதல்ல. அந்திகிறிஸ்துவும் நமக்குப் புதிதல்ல. யோவான் எழுதுகிறபடி அன்றைக்கே பல அந்திகிறிஸ்துக்கள் இருந்தார்கள். அக்கிரமத்தின் ரகசியமும் அன்றைக்கே கிரியை செய்திருக்கிறது. "தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவது" என்பது சபை அல்ல. நடுவிலிருந்து நீக்கப்படுவது யார் என்பது வெளிப்படுத்தின 12ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. வான மண்டலங்களில் உள்ள அதிகாரத்தில் (நடுவில்) இருந்து தாழ விழத் தள்ளப்படுவது தான் அழிவின் முதல் அடி. தானியிலுடைய ஜெபத்தை வான மண்டலங்களில் இருந்து தடை செய்தவன் யார்? சிந்தித்துப் பாருங்கள். அவன் தான் நடுவிலிருந்து நீக்கப்பட வேண்டும். பிறகு, கொஞ்சம் காலம் உண்டென்று பூமியில் சில வேலைகளை, உலகத்தின் அரசாங்கத்தை தன் கையில் போட்டு சாத்தானால் செய்ய முடிகிறது. அப்போதும் வெற்றி நமதே! "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். - வெளிப்படுத்தின விசேஷம் 12:11"

ஆனால் சில பிரசங்கியார்கள், சாத்தானை ஜெயிப்பதைக் கற்றுக் கொடுக்காமல், பிழையாக, தப்பித்து பறந்து போவதைப் பற்றி சொல்லிக்கொடுக்கிறார்கள். இது இயேசுவின் வார்த்தைகளுக்கு விரோதமானது. சாத்தானுடைய உபதேசம் தான் ரகசிய வருகை. இயேசு உலகத்தில் உபத்திரவ ம் உண்டு என்கிறார். மேலும் அவர் அதை ஜெயித்தார். நாமும் ஜெயிக்க அழைக்கப்பட்டோம். இவர்களோ, உபத்தரவத்தில் இருந்து சபை பறந்து போவதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பைபிள் படியுங்கள், ஆராய்ச்சி செய்து வேத வசனங்களை ஆதி அப்போஸ்தர்கள் புரிந்து கொண்ட விதமாகவே புரிந்து கொள்ளுங்கள்.. விழித்துக் கொள்வோம், இயேசு வருகிறார்.

கர்த்தராகிய இயேசுவே, வாரும்!

பின் குறிப்பு: வேதத்தை வேதமே விளக்க வேண்டும். வேறு யாரும் சொல்வதை விட, மாற்றுக் கருத்துக்கு வேத வசனைத்தையே ஆதாரமாகப் பதிவிடுஙகள்.

No comments:

Post a Comment