Wednesday, January 25, 2023

சாபம் மேற்கொள்ளாதது ஏனோ?

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள எல்லா சாபங்களும், ஒரு காலத்தில் மீட்பிலும் மறுவாழ்விலும் இணைக்கப்படும். உதாரணம், ஏசாயா, எரேமியா, ஓசியா ஆகிய புத்தகங்களில் தேவ மக்களுக்கு சாபமும், ஒரு புள்ளியில் மீட்பும் எழுதப்பட்டிருக்கும்.

மீட்பின் தீர்க்கதரிசனங்களைக் கூர்ந்து பார்த்தால், பல இடங்களில் "அந்நாளிலே" என்று இயேசுவின் முதலாம் வருகையைக் குறித்தும் இரண்டாம் வருகையைக் குறித்தும் சொல்லப்பட்டிருக்கும்.

இயேசு கிறிஸ்துவின் மூலம் சேர்க்கப்படும் அனைவருக்கும் மீட்பு என்பது முத்தரிக்கப்படுவதால், பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள சாபங்கள், புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது. 

காரணம், அவர்களுடைய சாபம், "கிறிஸ்து" என்னும் மீட்பில் முடிகிறது. நம்முடைய விசுவாசமே, நம்முடைய இரட்சகரின் மீட்பில் தான் தொடங்குகிறது. 

ஒருவேளை பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் சொல்லப்பட்ட சாபம் பிந்தி வந்தால், அதை முடிக்கும் வேறொரு மீட்பு நமக்கேது? பொதுவாக தேவ ஜனங்கள் மேல் சொல்லப்பட்டுள்ள எல்லா சாபங்களுக்கும் மீட்பின் திட்டம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்த சாபங்களை மீண்டும் நமக்கென்று எடுத்தால், அதை முடிக்கும் வேறொரு மீட்பு நமக்கு இல்லாமலே போகிறது.

இதை முரண்பாட்டை முடிக்கவே, மன்னிப்பும், மன்னிக்க வேண்டும் என்ற உபதேசமும் நமக்கு அருளப்படுகிறது.

முகில்.

Tuesday, January 24, 2023

தொலைநோக்குப் பார்வை

ஆபிரகாமின் தொலைநோக்குப் பார்வை, தூரத்தில் உள்ள பரம தேசத்தைப் பார்க்க வைத்தது. ஆகாரின் பார்வையோ அருகில் இருந்த துரவைக்கூட பார்க்கக் கூடாதபடி சுருங்கி இருந்தது. 

அருகில் உள்ள பிரச்சினைகள், சுற்றி உள்ளவர்களின் தாக்கம் ஆகியவைகளால் செயல்படாமல் போன அனுபவங்கள் எனக்கும் உண்டு. சங்கீதக்காரன் தனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுக்கிறான். கட்டாயம் இந்த உதவி வேண்டும் என்று இருக்கும் பல வேளைகளில், ஆகார் போலவே நாமும் செயல்படுகிறோம்.

அடிமையின் சிந்தை கொண்ட ஆகார், தான் தேவனால் சுயாதீனமுள்ளவகளாக மாற்றப்பட்ட போதும், அடிமை மனநிலையில் இருந்து மாறாதவளாக, விசுவாசக் குறைவுடன் செயல்பட்டாள். 

ஆபிரகாமின் பார்வை எல்லாருக்கும் இயல்பாக இருக்க வேண்டும் என்றில்லை. ஆகார் போல அடிமையின் மனநிலையில் வளர்ந்தபடியால், தேவன் ஒருமுறை என்னுடைய கண்களைத் திறக்க வேண்டி இருக்கலாம்.

பார்வையடைய விரும்பிய அனைவருக்கும் புதிய ஏற்பாட்டில் இயேசு பார்வையளித்தார். அதுவே நமக்கான நற்செய்தி.

முகில்

Monday, January 16, 2023

அந்திகிறிஸ்து என்னும் தேவையில்லாத பீதி

உபத்திரவ காலத்துல நீ இங்க இருந்தா சாப்பாடுக்கு என்ன பண்ணுவ? முத்திரை இல்லாம உன்னால் வாங்கவும் விற்கவும் முடியாதே? அப்படினு ஒரு கேள்வி மக்களே.

"எங்கள் அனுதின உணவை எங்களுக்கு அளித்தருளும்" என்னும் பரமண்டல ஜெபத்தை மறந்துவிட்டு, என்னிடம் கேள்வி கேட்பது நலமோ? 

ரகசிய வருகையை பேசுகிறவர்கள், இதை மட்டும் அல்ல. பல அடிப்படை உபதேசங்களையும் மறுதலிக்கிறார்கள். உதாரணம், பரிசுத்த ஆவியானவர் தான் நீக்கப்பட்டு விடுவாரே, நீ எப்படி விசுவாசத்தில் இருப்ப என்கிறார்கள். அதை கண்டுபிடித்த பிரசங்கியாரிடம் கேளுங்க. என் கிட்ட இல்ல.

இது போல பல தாறுமாறான உபதேசங்கள். உங்களால் ஜெயிக்க முடியாது, உங்களால் வாழ முடியாது, உண்ண முடியாது, உங்கள் பிள்ளைகள் பறந்து போய்விடுவார்கள். நாங்க முன்னாடி போறோம், நீங்க வேணும்னா பின்னாடி வாங்க, என்றெல்லாம்... 

வாட்ச்மேன் நீ போன்ற யுத்த வீரர்களைப் படித்து வளர்ந்த எங்களையா பயமுறுத்துகிறீர்கள்?கிரஹாம் ஸ்டெயின்ஸ்-ன் பிள்ளைகளுக்கு நெருப்பைக் காட்டினால் பயம் வருமோ? எரோதை நரி என்று அழைத்த இயேசுவின் பிள்ளைகளிடம் பூச்சாண்டி என்று சொல்கிறீர்களா?

தேவபெலன் என்று ஒன்று இருப்பதையும் மறந்துவிட்டார்கள். பிதாவிடம் இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்கும் வரை தான் அவருடைய கலக்கம் எல்லாம். அந்த ஜெபத்திற்குப் பிறகு இயேசு சிலுவை  வரை, மரணம் வரை தயங்காமல் சென்றார். சிலுவையில் கூட ஆத்தும ஆதாயம் செய்தார். அவரின் பிள்ளைகளையா பலவீனப்படுத்தப் பார்க்கிறீர்கள்?

இப்படிப் பார்த்தால் ரகசிய வருகை என்பது, பல வேதாகம சத்தியத்தை அடித்து சாப்பிட்டு விட்டு, ஓடு என்கிற ஒன்றை மட்டும் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு வரலாற்றுப் பிழை. அதைப் பிரசங்கிக்கும்போது மட்டும், வேதாகமத்தின் அனைத்து சத்தியங்களையும் மறந்துவிடும். அப்படி நினைவிருந்தால் அந்த கோட்பாடு எதுவுமே, சத்தித்தோடு பொருந்தாது. சரியானது என்னவோ, அதுவே ஆண்டவர் வாயிலிருந்து வந்தது. அதை மட்டும் நம்புவோம். இந்த "ரகசிய வருகை மற்றும் அந்திகிறிஸ்து பூச்சாண்டி" காட்டும் உபதேசியார்களை இனம்கண்டுகொண்டு தவிர்த்து விடுவோம்.

முகில்

Monday, January 9, 2023

தடம் புரளாமல் பயணிப்போம்

பில்லி கிரஹாம் என்னும் சுவிசேஷகர், தான் மரிக்கும் வரை, தன்னுடைய பிரசங்கத்தை மாற்றவில்லை. எந்த நோக்கத்திற்காக அழைக்கப்பட்டாரோ, அதையே நிறைவேற்றினார்.

கிரஹாம் ஸ்டெயின்ஸ் ஒரிசாவில் தான் கொல்லப்படும் வரை மருத்துவ மிஷனரியாக பணியாற்றினார்.

பக்த் சிங், சாது சுந்தர் சிங், வில்லியம் கேரி என இன்னும் பலரையும் குறிப்பிடலாம். அவர்களும் தங்கள் அழைப்பில் கடைசி வரை உறுதியாக இருந்தார்கள்.

ஆனால், அகஸ்டின் ஜெபகுமார் அண்ணன், அழைக்கப்பட்டது மிஷனரி எனும்போதும், மேடைகளில் அதைக்குறித்து பேசாமல், ஏன் அரசியல், சபை பஞ்சாயத்து என மற்றவர்களைத் திட்டுகிறார்?

மோகன் சி அண்ணன் சுவிசேஷகர் என அழைக்கப்பட்ட போதும் எதற்கு அப்போஸ்தலர் போல சபைகளுக்கு அடுத்தவைகளை பேசிக்கொண்டிருக்கிறார்? சமீபத்தில் சில பிழைகளுடன் எஸ்கட்டாலஜி (வருங்காலவியல்) எல்லாம் பேசினார்.

நாம் அழைக்கப்பட்ட நோக்கத்தை விட்டு மாறும்போது, நாம் யாருக்கும் பயனில்லாமல் போவதைத் தவிர்க்க முடியாது. நாம் அழைக்கப்பட்ட நோக்கத்திற்காகவே தேவன் நம்மை பயிற்றுவித்தார். அப்படியே பயன்படுத்துகிறார். அவ்வப்போது, பல்வேறு ஊழியங்களை நாம் செய்ய நேரிடலாம். ஆனால் நாம் தேவனால் உருவாக்கப்பட்ட பிரதான நோக்கம் ஒன்றாகத் தான் இருக்க முடியும். தடம் புரளாமல் பயணிப்போம்.

முகில்.