Tuesday, December 22, 2020

முழுசா படி நண்பா..

 *முழுசா படி நண்பா...* 

அன்பின் வலி, நட்பின் வலி, உறவின் வலி, காதலின் வலி.. இவைகளில் சிக்கி பழக்கப்பட்டவர்கள் ஒரு காலத்தில் இந்த வலியை அனுபவிக்க விரும்பத் தொடங்கி விடுவார்கள்.. 

வலியை விரும்புவது ஒரு உளவியல் நோய்..

இவர்கள் சோகப்படல்களைக் கேட்பார்கள், மற்றவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள், சிரிப்பது போல் நடிப்பார்கள்.. இவர்கள் ஆபத்தான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் அதிகம்..

சுய பரிதாபம் இவர்களுக்கு அதிகம் இருக்கும், இவர்களது எழுத்து, பேச்சு, ஓவியம், சமூக ஊடங்களின் செயல்பாடுகள், முகப்புப் படங்களின் மூலம் இவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.. ஆனால்  அதற்குக் கொஞ்சம் உளவியல் அறிவும் அவர்களோடு நல்ல பழக்கமும் இருக்க வேண்டும்...

நம் சமுதாய அமைப்பு சுயநலமானது. ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களில் யார் முதலில் வருவது என்னும் போட்டியை உருவாக்குவது, ஒரே அலுவலகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது போன்றவை அன்பு, நேசம் போன்றவற்றை மனித இதயத்திலிருந்து பிரித்து மலையேற்றி விடுகிறது.

உங்கள் அன்பிலும் அரவணைப்பிலும் எண்ணெய் ஊற்றுங்கள்.. நேசம் எரியும் நெருப்பாகட்டும்...

உங்கள் மடியும் மார்பும் உங்கள் நேசத்தைப் பகிரும் இடங்களாகத் தாருங்கள்.. தேவனுடைய மடியில் அவருடைய குமாரன், இயேசுவின் மார்பில் அவருடைய ஸ்நேகிதன்...

உங்கள் தோளிலும் உங்கள் கற்பத்திலும் நண்பர்களை சுமந்துகொள்ளுங்கள்.. தேவன் சுமப்பது போல...

நண்பர்களை நினைத்திருங்கள்.. உள்ளங்கைகளில் வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்.. 

உங்களைப் போலவே உஙகள் நண்பர்களை எண்ணுங்கள்.. 

உதவி செய்யும் போது அப்பார்ட்மெண்ட் ஆளாக இருந்தாலும் குப்பத்து கோபாலாக மாறிவிடுங்கள்... கேட்காமலே வந்து நில்லுங்கள்...

இனிமே நமக்குத் தெரிஞ்ச எவனும் "எனக்கு யாரும் இல்லனு" சொல்லக்கூடாது.. அப்பிடி சொன்னா நமக்கும் யாரும் இல்லன்னு அர்த்தம்..

கதவைத் தட்டாமலே உள்ளே வா.. என் நண்பா...

Monday, November 2, 2020

சில்லறையைச் சிதற விடுவோம் - பகுதி 1

 Casual questions and cool answers :

1. தசமபாகம் கொடுக்கவில்லை என்றால் மருத்துவமனைச் செலவு வருமா? 

- வராது, அன்பினிமித்தம் காணிக்கை கொடுப்பதே நன்று. கர்த்தர் மிரட்டி பணம் பறிப்பவர் அல்ல.

2. சண்டே தேர்வு எழுதப் போனால் ஃபெயில் ஆகி விடுவார்களா?

 - நன்றாகப் படித்தால், தேவனே வாய்க்கச் செய்வார். குதிரை யுத்தநாளுக்காக ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும்.

3. வெள்ளைச் சட்டை போடாமல் சர்ச்சுக்கு வந்தால் பரலோகம் போக முடியாதா?

 - உங்களுக்குப் பிடித்திருந்தால் போடுங்கள். யாரும் கட்டாயப் படுத்தக் கூடாது. அதற்கும் பரலோகம் போவதற்கும் சம்பந்தம் இல்லை.

4. காதல் திருமணம் பாவமா?

 - தேவனை விட்டு தூரம் போகாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் சரி. நூறு முறை யோசிக்கலாம், ஆயிரம் முறை ஆலோசனை கேட்கலாம், முடிவு உங்கள் கையில் (குறிப்பு : காதலித்துவிட்டு உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது,  அதற்கு காதலிக்காமல் காத்திருப்பதே சிறந்தது)

5. ஊழியக்காரர்கள் தவறு செய்தால் வாய் திறந்து சுட்டிக்காட்டக் கூடாதா?

 - தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டும். மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும் பிரச்சனை என்றால் மற்றவைகளை எச்சரிக்கை செய்வதே நியாயம்.

6. அடுத்த கேள்வி என்னவென்றால்...

#Stop #I_am_not_prepared_to_answer_you #You_are_anti_indian

Saturday, October 24, 2020

Sunday vs Sabbath

Sunday vs Sabbath (என்னுடைய கருத்து)

"Sunday வேலைக்கு போகாத, கடைய திறக்காத. சர்ச் முடிச்சுட்டு வீட்டுல போயி உக்காரு"

ஆனால் இவர்களுக்கு Sabbathக்கும் Sundayக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

ஏழாம் நாள் மன்னாவை ஆறாம் நாளில் கர்த்தர் தருவார். இது இஸ்ரவேல் தேசத்துக்காக சொல்லப்பட்ட ஆசீர்வாதம். 

ஓய்வு ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் மூன்று வருஷ விளைச்சலை கர்த்தர் தருவார். இது இஸ்ரவேல் தேசத்துக்காக சொல்லப்பட்ட ஆசீர்வாதம். 

இந்த பாழாய்ப்போன சோமாலியா, நைஜீரியா மற்றும் வறண்ட பூமியான எங்கள் ராமநாதபுரம் மாவட்டம் இவைகளுக்கெல்லாம் இது பொருந்தாது. பொருந்தினால் பார்த்து சொல்லவும். 

பொருளாதாரத்தில் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நம் இந்தியாவுக்கும் இது பொருந்தாது. பொருந்தினால் பார்த்து சொல்லவும்.

இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் ஏதாவது பொருத்தம் இருந்தா சொல்லுங்க. சரீரப் பிரகாரமான ஆசீர்வாத்தில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு பல ஆயிரங்கள். ஆவிக்குரிய ரீதியில் கிறிஸ்தவர்கள் மேலானவர்கள். சரீரம், நிலம் இவற்றில் அப்படியல்ல. 

ஒரு நாள் அல்ல. எல்லா நாளையும் கர்த்தருக்கே கொடுப்பது தான் நம் அழைப்பு. நம்முடைய Sabbath, பஸ்கா எல்லாம் கிறிஸ்து வரும்போது கொண்டாடப்படும். ஞாயிறு மட்டும் பிரசவ வேதனையும் பசியும் யாருக்கும் விதிவிலக்கல்ல. 

இப்படிக்கு,

இந்தியக் கிறிஸ்தவன்.

Monday, October 12, 2020

மார்பகம் என்ன கவர்ச்சிப் பொருளா? (14+)

ஒரு மனிதன் பிறந்த பிறகு அவன் சேரும் முதல் இடம் தன் தாயின் மார்பகங்கள் தான். அந்தக் கொலஸ்ட்ரம் என்று சொல்லப்படும் முதல் நிலைப் பால் மனிதனால் உருவாக முடியாத பேரற்புதம்...

ஒரு மனிதன் பிறந்து சில மாதங்கள் இரவும் பகலும் தூங்காமல் கண் விழிக்கும் தாய், உஷ்ணத்திற்கும் அரவணைப்பிற்கும் அவளிடம் சேர்க்கும் இடம் அவளுடைய மார்பகங்கள்...

பிள்ளைப்பெற்ற பல பெண்கள், பலவித உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் எடை மற்றும் மார்பக அளவுகள் கூடும்போது, அவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள், பல கணவன்களுக்குக் கூடப் புரிவதில்லை...

இரவும் பகலும் வீட்டுவேலை, கவலை, மன அழுத்தம், பிள்ளைகள் பராமரிப்பு என்றெல்லாம் போராடும் பல பெண்களுக்கு தங்கள் உடலைப் பராமரிக்க நேரமில்லை. திடீரென்று மார்ப்பில் வலி, வீக்கம்.. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தால், மார்பகப் புற்று நோய் என்று ரிப்போர்ட். 

அறுவை சிகிச்சை முடிந்தது.  "மார்பகங்கள்" இப்போது "மார்பகம்" ஆனது. அப்போதும் அந்த வலியைப் பகிர ஒருவரும் இல்லை. 

கடைசியாக சவப்பெட்டி அழைக்கிறது, மீதமுள்ளதை புழுக்களும் நுண்ணுயிரிகளும் உண்டு தன் கடமையை முடிக்கிறது...

இதற்கு மத்தியில், 

சில கூத்தாடிகள் திரைப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் பெண்ணின் மார்பகத்தை ஆபாசமாக சித்தரித்து நிறைய பணம் ஈட்டுகிறார்கள். இவர்களே பிற்காலத்தில் அரசியல் பதவிகளுக்கு வந்து தமிழ்த் தாயின் மார்பையும் பாரத் தாயின் மார்பையும் அறுத்து சாப்பிடவும் செய்கிறார்கள்...

சாலையில், ரயிலில், பேருந்தில் என எல்லா இடங்களிலும் பார்வைகள் இடம் மாறும் மனிதர்கள்.. உச்சகட்டமாக சில தாறுமாறான சீண்டல்கள்.. சிந்தையில் விதைக்கப்பட்ட விஷயம் தான் பார்வையாகவும் செயல்களாகவும் மாறுகிறது. அவனை மட்டும் குறை சொல்லி என்ன செய்வது.. கல்வி மனப்பாடம் செய்ய சொல்லியும், சமுதாயம் இது போன்ற சினிமாக்களை பார்க்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறது...

பெண்ணின் மார்பகங்களை போகப்பொருளாக சித்தரித்து படம் எடுப்பவர்கள், பாடல் எழுதுபவர்கள், வாழ்க்கையில் ஒரு முறையாவது தங்கள் தாயிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். காரணம் அவனுடைய மொழியில் "அந்த ஐட்டம்" இல்லை என்றால் அவன் என்றைக்கோ செத்திருப்பான்..

ஆபாசக் கதைகளை திரைப்படங்களாகவும், ஆபாச வரிகளை சினிமாப் பாடல்களாகவும் விதைத்த இந்த சமுதாயம், இவைகளை கல்வி என்னும் ஆயுதத்தைக் கொண்டு களையெடுக்க முடியும்.. ஆனால் அதுக்கு எவ்வளவு செலவாகுமோ! 

நூறு சதவீதம் இச்சையில்லாமல் யாரும் வாழ முடியாது, சில உணர்வுகள் இயற்கையானது. ஆனால் அதினால் வெளிப்படும் கண்ணியமற்ற பார்வையும் செயல்பாடும் மிகத் தவறானது. நம்முடைய சந்தைகளில் ஏற்படும் சில மாற்றங்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு கொஞ்சம் நல்லது. நமக்கு அது மிகவும் நல்லது. 

அப்புறம், அந்த சால் கரெக்ட் பண்ணிகோங்க சிஸ்டர்..

#நல்ல_சிந்தைகளைக்_கொளுத்திப்_போடுவோம்.

Tuesday, October 6, 2020

இந்த உலகத்தின் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி என்றைக்காவது யோசித்ததுண்டா?

என்றைக்கு வேண்டுமானாலும் மரணம் ஏற்படலாம், போர் மூலமாகவோ, ராணுவத்தின் மூலமாகவோ, இயற்கைப் பேரிடர் மூலமாகவோ எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற நிலையில் உள்ள மனிதர்கள்...

எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை என்ற நிலையில் வாழும் அகதிகளின் எண்ணிக்கை 12 மில்லியன் (கணக்கிடப்பட்டவை மட்டும்)

அமைதியான வாழ்க்கை வாழும் நான் அதற்காக எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அமைதியற்ற இடத்திலேயே பிறந்து வாழும் அவர்களும் பாவம் செய்ததால் அங்கே இல்லை. 

இந்த நிலையில் ஜான் கால்வின் அவர்களின் சில கோட்பாடுகளையும் சிந்திக்க வேண்டியுள்ளது. எல்லாமே அங்கே தீர்மானிக்கட்டதென்று!

மனிதன் மரித்தபின் வாழ்கிறான் என்பது அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. பைபிள் அந்த வாழ்க்கைக்கு சில வரையறைகளை வைக்கிறது. அதில் ஒரு வகை பிரசங்கக் குறிப்புகளில் கண்டிராத ஒன்று.

லாசரு! இவனுக்கு உடம்பெல்லாம் பருக்கள், ஒரு வேளை கூட வயிறார உண்ண முடியாத நிலை. இவன் இறந்தபின் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறான். அதற்கு பைபிளில் சொல்லப்பட்ட ஒரே காரணம், அவன் உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் துன்பப்பட்டான், ஆதலால் இப்பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறான் என்பதே!

நம்முடைய பிரசங்க அறிவு கூட சில நேரங்களில் தேவனையே மிஞ்சி விடுகிறது. குறிப்பு எடுத்து பிரசங்கம் செய்வதை விட அவரைப் புரிந்து கொண்டு பிரசங்கம் செய்வதையே விரும்புகிறேன். கூடுமானால்.. 

அவரைப் பார்த்து பிரம்மிக்கும் போது யோபுவால் பேச முடியவில்லை. அவருடைய கேள்விகள் ஒன்றிற்கும் யோபுவிடம் பதில் இல்லை. 

அவருடைய மகிமையைக் கண்டபின் அன்பின் சீஷன் செத்தவனைப் போல பாதத்தில் விழுந்தான். அவருடைய மகிமையைக் காணாமலே நமக்கு இவ்வளவு பெருமைகளா!

எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தினமும் கற்றுக்கொள்கிறேன், அவரை அறிய, அவரைப்பற்றியே, அவர் பாதத்தில்! 

சகோதரன்,

முகில்.

Monday, September 28, 2020

Holy Spirit is Online!

Dear 2k Kids, Holy Spirit is Online! 

நாங்க 90ஸ், 80ஸ் கிட்ஸ். Orkut எங்களுக்கு கிடைத்த பெரிய பிரம்மாண்டமான சமூக வலைதளம். பிற்காலங்களில் Facebook. ஆனால் அதற்குள் வரவே எங்களுக்குத் தாமதமானது.

பாய்ஸ் படம் பாக்காத, கெட்டுப் போயிருவன்னு அன்றைய "சான்றோர்" சொல்லியும், 

ஸ்கூல் பசங்களா இருக்கும்போதே ரகசியமா பாய்ஸ் படத்தை பாத்து, வாழ்க்கையில் எப்பிடி உருப்படலாம்னு நினைத்த தலைமுறை நாங்க. 

ஆனா இன்னக்கி இருக்குற 2k கிட்ஸ புரிஞ்சுக்கவே முடியல. வாட்ஸாப் ஸ்டேட்டஸ்ல DP  வைக்காதனு அட்வைஸ் பண்ணா, இந்த 80ஸ் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கம் வரவா போறாங்கன்னு சொல்லிட்டு, அங்கே புகுந்து விளையாடும் தலைமுறை 2k கிட்ஸ். இன்றைக்கு காட்டப்படும் "சில" திரைப்படங்களோடு ஒப்பிடும்போது பாய்ஸ் படமெல்லாம் சுத்தபத்தமான படம். 

காதல் பண்ணினா வீட்டை எதிர்த்தாவது திருமணம் செய்ய வேண்டும் என்று போராடிய எங்கள் தலைமுறை. இதற்கு முந்தைய தலைமுறை அதற்கு மேல். பல காதல் தோல்வி தற்கொலை வழக்குகள். ஆனால் இப்பல்லாம் பிக்கப், டிராப், எஸ்கேப் தான்.

பத்து ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தலைமுறை வேறுபாடுகள் இருந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை. இதற்கு டெக்னாலஜி வளர்ச்சியும் ஒரு காரணம்.

சபை ஊழியங்களில் சிறந்து விளங்கும் பல மூத்த போதகர்கள் கூட, தங்கள் சொந்த பிள்ளைகளை வளர்க்க தடுமாறுகிறார்கள். அவர்களுக்கு Browsing History அழிக்கவும் தெரியும், தேவைப்பட்டால் Format பண்ணவும் செய்வார்கள். 

இதற்கெல்லாம் என்ன தீர்வு? வேத வசனம் பல ஆயிரம் ஆண்டுகளாக மாறாததுதான். ஆனால் அதை வாலிபர்களிடம் கொண்டு செல்லும் முறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது, தவறு ஒன்றும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே மாறாதவரும் தீர்வுமாய் இருக்கிறார்.

ஆவியானவர் ஒருவர் தான். வெளியே ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும் உள்ளான மனிதன் ஒருவன் தான். நம்முடைய உள்ளான மனிதன் நிர்வாணமாய் ஆவியானவர் முன்பாக இருக்கிறான். அதை பகுத்து பிரித்து ஆவியானவர் ஆராய்ந்து வைத்திருக்கிறார்.

ஆண்டவருக்கு நீங்க Delete பண்ற Browser history, Call history, whatsapp message எல்லாமே தெரியும். ஒரு நிமிஷத்தில் உங்க Smart Phoneஐ சுக்கு நூறாக்க, Corrupt பண்ண ஆண்டவருக்குத் தெரியும். அவருக்கு இந்த டெக்னாலஜி ஒரு தூசிக்கு கூட வராது. ஆனா பொதுவா அதை அவரு செய்ய மாட்டாரு. அவரு ரொம்ப Decent. சில நேரங்கள்ல கொஞ்சம் தூரத்துல நிப்பாரு, உங்க personal matterல தலையிட மாட்டாரு. நீங்க அவர் கிட்ட ஒப்புக்கொடுக்கும் வரை.

ஆனா அவர மாதிரி ஒரு நல்ல Friend உங்களுக்கு கிடைக்கவே மாட்டாரு. எத்தனையோ முறை உங்களை Hug பண்ணுவாரு, Kiss பண்ணுவாரு. நீங்க தப்பு பண்ணும்போது ரொம்ப வருத்தப்படுவாரு. அத விட நீங்க நல்லவங்க மாதிரி சர்ச்ல நடிக்கிறீங்கன்னா, கொஞ்சம் தூரமாவே இருந்துக்குவாரு. 

ஆனா அவரு ரொம்ப நல்லவருங்க. அவரு நல்ல Friends தேடிக்கிட்டே இருப்பாரு. அவருக்கு Friendஆ இருக்குறவுங்க ரொம்ப கொடுத்து வச்சவுங்க. தானியேல், யோசேப்பு மாதிரி. தேசங்களோட அதிபர்கள் கூட உங்களை நம்பி இருக்குற மாதிரி பண்ணிருவாரு. அவர் கூடவே இருக்கனும், அது தான் ஒரே கண்டிஷன். 

கொஞ்சம் தனியா Time Spend பண்ணனும். பைபிள் எடுத்து அவர் கூட உட்காரனும். இயேசு கிறிஸ்துவுக்கு ரொம்ப பிடிச்சவுங்க, கூடவே இருந்த யோவான், பாதத்துல உக்காந்து பாடம் படிச்ச மரியாள். பரிசுத்த ஆவியானவரும் அதைத்தான் எதிர்பாக்குறாரு.

உங்க Friend யாரு, அது தான் இப்ப கேள்வி.. ஆவியானவர் உங்க நண்பன் அப்பிடினா நீங்க தான் ராஜா.. நண்பன் படத்துல விஜய் நண்பர்கள் வாழ்க்கையையே மாத்திருவாரு. ஆவியானவர் அதுக்கும் மேலான நண்பன். ராஜா, பிரதமர், ஜனாதிபதி, பார்லிமென்ட்ல மெஜாரிட்டில பாஸ் பண்ண மசோதா எல்லாத்துக்கும் மேலான ராஜரீக அபிஷேகம் உங்க மேல இருக்கும். 

கொஞ்சம் சினிமா கலந்தது உங்களுக்கு புரியத்தான். நண்பனை விட்றாதீங்க.. தேடியாச்சும் புடிச்சு ஒரு Good Morning, Good Afternoon, Good Night எல்லாம் சொல்லி கரெக்ட் பண்ணி வச்சுக்கோங்க. 

Holy Spirit is Online!

Monday, September 21, 2020

தேவ வார்த்தையும் மனிதனுடைய உபதேசங்களும்

ஒரு காலத்தில் டிவி வீட்டில் இருந்தாலே பாவம் என்று பிரசங்கம் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு டிவி, மீடியா வழியே பல ஊழியங்கள், சபை ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

பல சபைகளில் (இன்றைக்கும்) காதல் திருமணம் செய்பவர்களை சமூகத்தில் உள்ள தீய சக்திகளைப் போல பாவிப்பதுண்டு. ஆனால் அதே சபைகளில் ஜாதி மற்றும் வரதட்சணை கேட்டு நடத்தப்படும் திருமணங்களை வெள்ளைகொடி காட்டி வரவேற்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது.

இதே போல் தான் வெள்ளைச்சட்டை போடுவது, நகை அணிவது, முக்காடு போடுவது, மீசை தாடி எடுப்பது, சினிமா பார்ப்பது என்று மிஞ்சின பிரசங்கங்கள். பாவங்களை வேதத்தில் சொல்லப்பட்ட அளவில் சொல்வது தான் சரி. தொடாதே, சாப்பிடாதே, பார்க்காதே என்று சொல்லும் பிரசங்கங்களால் ஒரு பயனும் இல்லை. 

இனியாவது மனுஷ கற்பனைகளை (வெளியரங்கமான மாற்றங்களை) மேன்மைப்படுத்திப் பேசாமல் உள்ளான மாற்றத்தை பேச வேண்டும். வேதத்தில் விபச்சாரம் தவறு என்று சொன்னால், முழு உலகத்திற்கும் அது தவறுதான். அதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் மனிதர்கள் உருவாக்கிய கற்பனைகள் அப்படியல்ல. மனிதனுடைய உபதேசங்களால் நிறைந்த ஒரு பிரசங்கத்தை, ஒரு பத்து வருடம் கழித்து கேட்டால் அதிகபட்சமாக இருக்கும் (உதாரணம் டிவி வீட்டில் வைத்திருப்பது, ஸ்மார்ட் போனில் பைபிள் படிப்பது).

விபச்சாரம் செய்வதும், வெள்ளைச்சட்டை போடாமல் சபைக்கு வருவதும் பாவம் என்று சொல்லும்போது இரண்டிற்கும் ஒரே அழுத்தம் தரப்படுகிறது. இது தேவ கட்டளைகளுக்கு இணையாக மனுஷ உபதேசங்களை வைப்பது போன்றது. வேதத்தில் கூட்டினாலும் தவறு, குறைத்தாலும் தவறு.

ஏவாள் வஞ்சிக்கபட்டதில் மூன்று நிலை இருக்கிறது (Adding, Altering, Avoiding). தேவனுடைய கட்டளைகளோடு கூட்டுவது, அதை மாற்றுவது, அதை நிராகரிப்பது (நன்றாக ஏவாள் - சாத்தான் பேச்சை ஒவ்வொரு வார்த்தையாக படித்தால் புரியும்). 

வேத வார்த்தைகளில் ஒன்றும் கூட்ட வேண்டாம், குறைக்கவும் வேண்டாம். ஆலோசனைகளை சொல்லலாம், சொல்ல வேண்டும். ஆனால் அவை சூழ்நிலையை பொறுத்து மாறும். வேதாகமத்தில் உள்ள கட்டளைகளோ எந்த நிலையிலும் மாறாது. 

நன்றி,

சகோதரன் முகில்.

Monday, September 7, 2020

யாருக்கு மேன்மை?

ஒரு பிரசங்கியார் மேடை போட்டு ஒரு மணிநேரம் தாவீதைப் பற்றி பெருமையாகவும் சவுலைப்பற்றி சிறுமையாகவும் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வாலிபன் எழுந்து, "ஐயா, தாவீதைப் பற்றி பெருமையாக பேசுகிறீர்கள், ஆனால் அவர் செய்த பாவங்களில் சில, சவுல் செய்த பாவங்களை விட கொடுமையானது" என்றான்.

பிரசங்கியார் வீட்டிற்குச் சென்று தாவீது மற்றும் சவுலின் பாவங்களை  ஒரு பட்டியல் போட்டார். அவருக்கு அதிர்ச்சி என்னவென்றால், தாவீதின் ஒரு குறிப்பிட்ட பாவம் சவுலின் மொத்த பாவத்தையும் அடித்து சாப்பிடுவது போல் இருந்தது.

பிறகுதான் புரிந்து கொண்டார், இனிமேல் மேன்மையாகப் பேச வேண்டியது பாத்திரங்களைப் பற்றியல்ல. பாத்திரங்களை உருவாக்கி அவர்களைப் பயன்படுத்தும் தேவனைப் பற்றிதான் என்று.

ஒரு புதிய உடன்படிக்கை விசுவாசி, கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய சிலுவையைப் பற்றியுமே பேச வேண்டும். எந்த சாட்சியைப் பேசினாலும், அந்த சாட்சியை உருவாக்கிய கர்த்தரையே மேன்மைபாராட்ட வேண்டும். 

தாவீதைப் பெருமையாகப் பேசும் சில பிரசங்கியார்கள், பிற்காலங்களில் பாவங்களில் விழும்போது, அதே தாவீதின் பாவங்களை மறைவிடமாகவும் புகலிடமாகவும் பயன்படுத்துவது துரதிஷ்டவசமானது. கிறிஸ்து தான் நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரி. அவரிடத்தில் பிழை ஒன்றுமில்லை.

*மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். - 2 கொரிந்தியர் 10:17*

*நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:11*

#கிறிஸ்துவின்_சிலுவையை_மேன்மை #தேவனுக்கே_மகிமை 

- முகில்

Thursday, August 13, 2020

திருச்சபை

 *இவள் தான் திருச்சபை*

திடீரென்று ஆண்டவரின் ஒரு வசனம் ஞாபகம் வந்தது. "உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள் - லூக்கா 12:7)"

ஆம், மனிதர்கள் நேசிக்கக் கற்றுக் கொண்ட முறைகளே ஆண்டவரிடம் இருந்து தான். ஆண்டவரோடு உறவாடும் அனுபவங்களில் பல்வேறு விதங்கள் உள்ளது. அந்த உறவை நன்றாகப் புரிந்து கொண்டால், அது கணவன் மனைவி உறவுக்கு முன்பாகவே நித்திய காலமாய் வைக்கப்பட்ட முன்மாதிரி என்பது புரியும். 

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து....

எபேசியர் 5:25

மேற்கொண்டு இதை எழுதும் பவுல், கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இருக்கும் உறவு ஒரு இரகசியம் என்று எழுதுகிறார். ஒரு மனிதனுக்கும் தன் மனைவிக்கும் உள்ள நெருக்கம் (intimacy) எப்பிடி சொல்ல முடியாத அறைக்குள் இருக்கும் இரகசியமோ, அப்பிடித்தான் கிறிஸ்துவுக்கும் சபையாகிய நமக்கும் உள்ள இரகசியம். 

நன்றாக குளித்து, வாசனையான திரவியங்கள் அடித்து, அழகான உடை உடுத்தி, அறையை சுத்தம் செய்து, மேஜையை அழகாக்கி, மிதமான வெளிச்சம் கொண்ட விளக்கைக் கொளுத்தி வைத்து, இரவில் வீட்டுக்காரர் சாப்பிட வருவார் என்று புதிதாக சமைத்த உணவை மேஜையில் வைத்துக் காத்திருக்கிறாள் மனைவி. அவளுக்கு அவ்வளவு நேசம், அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். சீரியல், மொபைல் ஃபோன் எல்லாம் பார்க்கவில்லை. காரணம் அவள் மனதில் நிறைந்திருப்பது நேசருடைய நினைப்பு மட்டுமே. திடீரென்று மனதில் ஒரு எண்ணம், வேகமாக பீரோவை திறந்து அவருக்குப் பிடித்த ஒரு நெக்லஸை எடுத்து அணிந்து மேலும் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். 

திடீரென்று கதவைத் தட்டும் சத்தம். கதைவை வேகமாக சென்று திறக்கிறாள், நேசர் வந்துவிட்டார். பிறகு அவர், அவளோடு உறவாடி போஜனம்பண்ணுகிறார். இது போன்ற ஒரு வேளை தான் சபையும் கிறிஸ்துவும் எதிர்கொள்ளவிருக்கும் வேளை. மனவாட்டியகிய சபை இப்படித்தான் ஆயத்தப்பட்டுக் காத்திருக்க வேண்டும். 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 

வெளிப்படுத்தின விசேஷம் 3:20"

கதவைத் திறந்தால், *அறைக்குள்* தானே பிரவேசிக்க முடியும், அதென்ன *அவனிடத்தில்* பிரவேசிப்பது? விளக்கங்கள் தேவையில்லை, அந்த மணவாளன் மனவாட்டியின் நெருக்கத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அவரோடு சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆனந்தம், எவ்வளவு கேள்விகள் அவரிடம் கேட்கலாம், புரியாத வேத வசனங்கள், அவருடைய சிலுவைப் பாடுகள், அவருடைய அன்பின் நீள அகல ஆழ உயரங்கள் என பல கேள்விகள் கேட்கலாம். அது அநேகமாக நம்முடைய இதயங்கள் கொழுந்து விட்டு எரியும் நேரம் (லூக்கா 24:32). அது தான் சாலமோன் சொன்ன எரியும் நேசத்தழல். (உன்னதபாட்டு 8:6)

கொஞ்சம் பின்நோக்கிச் செல்வோம், அந்த மனைவி ஆயத்தத்தோடு இருக்கிறாள், அவர் வரத் தாமதித்தால், இந்த மனைவி கொஞ்சம் கண் அசர்ந்து சோஃபாவில் படுத்துவிட்டாள் (சோஃபாவில் தான் படுத்தாள், படுக்கை அறையில் இல்லை). திடீரென்று கதவைத் தட்டும் சத்தம் (அல்லது காலிங் பெல் சத்தம்). வேகமாக எழுந்து, இதோ வந்துவிட்டேன் என்ற பதற்றக் குரலோடு, கொஞ்சம் டச்சப் பண்ணிக்கொண்டு கதவைத் திறக்கிறாள். நேசர் வந்துவிட்டார். மீண்டும் அதே நேச சம்பவங்கள்..

மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 

நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 

அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். 

மத்தேயு 25:5-7

மேற்கண்ட வசனத்திலே, புத்தியுள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் எல்லோரும் தூங்கிவிட்டார்கள், அது நம்முடைய மாம்சத்தின் இயல்பு. ஆனால் புத்தியுள்ளவள் எண்ணெய் என்னும் ஆயத்தத்தோடு தூங்கினாள். அது வீட்டை சுத்தப்படுத்தி, சமைத்து, அலங்கரித்து அரை விழிப்போடு சோஃபாவில் தூங்குவதற்குச் சமம். ஆனால் புத்தியில்லாதவள், வீட்டைக் குப்பையாகப் போட்டு, மதியம் வைத்த பழைய சோறை ஃபிரிட்ஜுல் வைத்துவிட்டு, எந்த ஆயுத்தமும் இல்லாமல் படுக்கை அறையில் நன்றாக தூங்கிவிட்டாள். மணவாளன் வந்தபோது இவளுக்கு நடந்தது என்னவென்று அதே வேதபகுதியின் கிழே வாசிக்கலாம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஆயத்தம், ஏதோ சில கடமைகளை நிறைவேற்றுவதில் முடிந்துவிடாது. வேலைக்காரர் கூட இந்த அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொடுக்க முடியும். ஆனால் இந்த மனவாட்டியின் ஆயத்தம், சாதாரண கடமையாக இல்லாமல், உள்ளிருந்து வெளிப்படும் நேசத்தழலின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். இந்த நேசத்தழலை வெள்ளம் போன்ற எந்த சூழ்நிலையும் தணிக்க முடியாது.

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும், நேசம் மரணத்தைப்போல் வலிது, நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. 

உன்னதப்பாட்டு 8:6

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது, ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். 

உன்னதப்பாட்டு 8:7

தன் வீட்டிலுள்ள ஆஸ்திகள் அனைத்தையும் கொடுத்தாலும், அந்த மனவாட்டியின் நேசத்திற்கு முன்பாக அது அசட்டைபண்ணப்படும். தான் தகப்பனார் பெரிய செல்வந்தராக இருந்தாலும், தன் காதலனைக் கைபிடிக்க அனைத்தையும் உதறிவிட்டு ஓடி வந்த காதலியின் நேசத்தைப் போல. ஊரே அந்தப் பெண்ணை தூஷித்தாலும், தன் காதல் கணவனுக்காக அனைத்து சொற்களையும் அசட்டை செய்யும் காதலியின் நேசத்தைப் போல. 

எனக்கு நீங்க மட்டும் போதும் என்று சொல்லும் காதலியின் நேசம், இந்த திருச்சபையான மனவாடிக்குள் கொழுந்து விட்டு எரிகிறது. நேசரின் காதல் வைராக்கியம் அவர் உயிரைக் கூட நமக்குக் கொடுத்தது. அதற்கு பதில் செய்யும் காதல் வைராக்கியம் இந்த மனவாட்டிக்குள் தீப்பிடித்து எரிகிறது. பரிசுத்த அழகும் ஆயத்தமும் எப்போதும் இவளுக்குள் இருக்கிறது. இவள்தான் நேசருடைய ஒரே பார்வையும் எண்ணமும். இவள் தான் திருச்சபை.

- முகில்.

Friday, March 27, 2020

Atheist vs Agnostic vs Christian on Corona Virus

Atheist vs Agnostic vs Christian - Corona Virus.

சிலர், கொள்ளைநோய்களால் மக்கள் இறக்கிறார்கள், ஆகையால் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் சிலர், கடவுள் இருந்தால் ஏன் இப்படி நடக்கிறது, கடவுள் ஏன் இதைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று கேட்பார்கள்.

இரண்டு கூற்றுக்கும் வித்தியாசம் உள்ளது. முதல் கூற்றைச் சொன்னவர் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருப்பார் (atheist). இரண்டாவது கேள்வியைக் கேட்டவர் கடவுளைப்பற்றிய ஒரு உறுதியான நிலைப்பாடு இல்லாதவராக (agnostic) இருப்பார்.

ஆனால் இறைவன் உண்டு என்றும் மனுக்குலத்தை மீட்க அவர் மனித அவதாரம் எடுத்து இயேசுவாக வந்தார் என்றும் அவர் மீண்டும் வருவார் என்றும் நம்புவதே கிறிஸ்தவம். இதில் தெளிவு உள்ளவன் ஒரு கிறிஸ்தவனாக(christian) இருப்பான்.

ஆனால் தேவன் பாவிகளின் மேல் பேரழிவைத் தருவதுதான் இந்தக் கொள்ளைநோய்கள் என்று சொல்பவர்கள், இந்த இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் புரிந்து கொள்ளாமல், இயேசு என்னும் நல்ல ஆண்டவரை கொரோனா வைரஸை விட மோசமானவராக சித்தரிக்கும் சுயநீதிமான்கள். சொல்லப்போனால், தன்னை agnostic என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட, தனக்கு சரியாகப் புரியவில்லை என்று ஒத்துக் கொள்வார்கள். ஆனால் எனக்கு எல்லாம் புரிந்து விட்டது என்று சொல்லிக் கொண்டு, இயேசுவின் சுவிசேஷத்தை ஜீவனுக்காக பிரசிங்கிக்காமல், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக தீர்க்கிறவர்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்ல முடியாது.

பாவிகளை தேவன் நியாயத்தீர்ப்பு செய்வாரா? ஆம். ஆனால் எப்போது செய்வார்? இயேசு இதைப் பற்றி அக்கினியும் கந்தகமும் அழுகையும் பற்கடிப்பும் உண்டான இடம் என்று சொல்லியிருக்கிறார். கொள்ளநோயால் மரித்தவர்கள் எல்லாம் இங்கே தான் போவார்கள் என்று இயேசு எங்கும் சொல்லவில்லை. மாறாக வேறு ஒன்றை இயேசு சொல்லியிருக்கிறார்.

"சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே, எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். "
(லூக்கா 13:4,5)

மேற்கண்ட வசனத்தில் இறந்து போனவர்கள், நரகம் செல்லும் கொடும்பாவிகள் என்று சொன்னால், அவர்களை விட பெரும் பாவிகள் பூமியில் சுற்றித் திரிய தேவன் அனுமதித்தது எப்படி? முரண்பாடாகத் தோன்றவில்லையா? ஆனால் அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையும் இல்லை என்று வேதம் சொல்கிறதே.

சரி, கொள்ளைநோய்களால் பாவிகள் எல்லோரும் மரிக்க தேவன் இப்பொழுதே நியாயத்தீர்ப்பு செய்துவிட்டார் என்று சொன்னால், எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்கிறாரே. உங்களுக்கு என்ன வேலை?

இதைப்பற்றி புரிந்து கொள்ளத்தான் இயேசுவைப் போல நித்திய ஜீவ சிந்தனைகள் நமக்கு வேண்டும். சுவிசேஷ பாரம் வேண்டும். உன்னை நேசிப்பது போல் பிறனை நேசி என்ற வசனத்தை புரிந்தவனாக இருக்க வேண்டும்.

நான் கிறிஸ்தவன் தான், ஏன் இத்தனை அழிவு என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் agnostic இல்லை. காரணம், எனக்கு என்னுடைய பணி என்னவென்று தெரியும். இயேசுவின் அன்பைப் பகிர்வதும், அவருடைய சுத்தமான சுவிசேஷத்தை சொல்வதும் தான். அவர் அன்பும் இரக்கமும் உள்ளவர் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அவர் அப்படித்தான் இருக்கிறார்.

பாவிகள் சாகிறார்கள் என்று சொல்ல நான் அழைக்கப்படவில்லை. ஏன் என்றால் நானும் ஒருநாள் இந்த தேகத்தை விட்டு பிரிந்துதான் ஆகவேண்டும். நான் கிறிஸ்தவன் என்பதால் ஒரு ஆயிரம் ஆண்டு இங்கேயே குடியிருக்கப் போவதில்லை.

குடியிருப்பு என்பதும் வாழ்வு என்பதும் வேறு. இந்த தற்கால சரீரம் என்னும் குடியிருப்பை விட்டு, வேறு ஒரு குடியிருப்பை என் ஆன்மா பெற்றுக்கொள்ளும். வாழ்வு என்பது நித்திய ஜீவனோடு தொடர்புடையது. பூமியின் வாழ்வு, பரலோக வாழ்வு என்று இடம் சார்ந்த வாழ்வு இல்லை இது. தற்கால வாழ்வு, நித்திய வாழ்வு என்னும் பொருள் சார்ந்த வாழ்வு. இடத்தைப் பற்றி எனக்கு பெரிய கவலை இல்லை. காரணம் இயேசு, என்னை மீட்க, பரலோக மேன்மையை விட்டு பூமிக்கு வந்தார். அவரோடு இருந்தால் போதும், அது தான் என்னுடைய வாஞ்சை. எனக்கு பரலோகத்தில் 100 சென்ட் இடமெல்லாம் வேண்டாம். பல ஊழியர்கள் இதிலும் ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பித்து விட்டனர் என்பது வேதனை.

இயேசு தன்னை ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஏராளம் நித்திய ஆசிர்வாதங்களை உடன்படிக்கையாக ஏற்படுத்தியிருக்கிறார். அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஏதோ மத மாற்றமோ, பெயர்மாற்றமோ செய்யவேண்டியது அல்ல. அவர் சொன்னதெல்லாம் படித்து, அதன்படி வாழ ஒப்புக்கொடுக்கும் அந்த "வாழ்க்கை" மாற்றமே கிறிஸ்தவம்.

என் வாழ்க்கை மாறினால், நான் சிந்திக்கும் விதம் மாற வேண்டும். பிறனைப் பார்க்கும் பார்வை அன்பின் பார்வையாக மாறும். நான் கேட்கும் பல பிரசங்கங்களிலும், நான் சந்திக்கும் பிரசங்கியார்களில் பலரும், இந்த அன்பின் பார்வையை கடத்தத் தவறி விடுகிறார்கள்.

கொரோனா வைரஸ் கொடூரமானது. அது பெற்றோரை பிள்ளையற்றவர்களாகவும், பிள்ளைகளை பெற்றோராற்றவர்களாகவும், துணையிழந்தவனாகவும் மாற்றுகிறது. இயேசுவின் சீடனாக என்னுடைய வேலை இரண்டு. அவர்களுக்காக நான் செய்யும் வேண்டுதல், அவர்களுக்கு நான் செலுத்தும் அன்பு. பிள்ளைகளை இழந்தவர்களுக்கு பிள்ளைகளாக இருங்கள். பெற்றோரை இழந்தவர்களுக்கு பெற்றோராக இருங்கள். துணையிழந்தவருக்கு ஆரதவளியுங்கள். இயேசுவின் அன்பைச் சொல்லுங்கள், செயலில் காண்பியுங்கள். மதத்தைப் பற்றிப் பேசாதீர்கள். உள்ளதைப் பகிர்ந்து கொடுங்கள். வரங்களை தேவன் கொடுத்தால், அதை வைத்து  பெரிய பெர்ஃபாமன்ஸ் பண்ணாமல், குணமாக்குங்கள். என்ன வந்தாலும் இயேசு இதைத்தான் செய்ய சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

அவர் நடந்த வழியிலே நாமும் நடந்தால் தான் இயேசுவின் சீடன். பாதங்களுக்குப் பணிவிடை செய்ய அழைக்கப்பட்டவர்கள் எல்லாரும், எலியாவைப் போல் அக்கினியை இறக்கிக்கொண்டிருந்தால், இயேசு எப்படி வெளிப்படுவார்?

வரும் நாட்களில் உதவி, அன்பு, ஆதரவு ஆகிய தேவைகளோடு பலர் வரலாம். நாம் பேசினால் மட்டும் போதாது, செயலில் வெளிப்படுத்துவோம்.

உங்கள் சகோதரன்,
முகில்.

Thursday, March 5, 2020

உந்தன் தயவில்

உந்தன் தயவில் எழுந்தேன், மீண்டும் விழுந்த போதும்
தேடி வந்து கண்டீர்,
ஓடி ஒளிந்த போதும்.

கேளும் ஆண்டவரே,
மன்னியுமே
கவனியும் ஆண்டவரே
தாமதியாமலே..(2)

மரணம் எந்தன் சம்பளம்;
அதை ஏற்றுக் கொண்ட தேவா.
கிருபைவரமோ ஜீவன்;
அதை பெற்றுத்  தந்தீரே..

சூழ்ந்ததே என்னைப் பேரிருள்
வெளிச்சம் தாரும் தேவா
இழுத்தது கடலின் பேரலை
கரத்தைத் தாரும் தேவா

நித்தம் என்னை நடத்தும் - என்
ஆத்துமாவை தேற்றும்
வறண்ட வாழ்வில் வாரும்
நீரூற்றாய் மாற்றும்


பூட்டின வீட்டின் உள்ளே
வந்து நின்றீர் தேவா - என்
இதய வீட்டில் வாரும்
சமாதானம் தாரும்..

Saturday, February 22, 2020

நம்முடைய யுத்தம் முடியவில்லை

நம்முடைய யுத்தம் முடியவில்லை

நம்முடைய யுத்தம் கல்வாரி சிலுவையில் முடிந்துவிட்டதாக ஆன்ரு வாம்மேக் என்னும் ஊழியர் எழுதிய புத்தகத்தைப் பிடிக்க நேர்ந்தது. முழுமையான வேதத்தைப் புரிந்து கொண்ட யாரும் அவருடைய கூற்றுகளை ஏற்றுக்கொள்வதில்லை.

மனுக்குலத்திற்கு விரோதமாக இடப்பட்டிருந்த கட்டளைகளை இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார். அதாவது நியாயப்பிரமானம் என்பதை செல்லாக் காசக்கி, அன்பு என்னும் புதிய பிரமானத்தை மனித குலத்திற்கு வகுத்துக் கொடுத்தார். (கொஞ்சம் ஆழமாக கொலோசெயர் 2:13-15ஐ படிக்கவும். புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்).

நம்முடைய போராட்டங்கள் முடியவில்லை என்றும், அந்த போராட்டங்களை ஆவியின் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது. (எபேசியர் 6 : 12-17)

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத சரீரம் எப்படி சாக நேரிடுமோ, அது போலவே, ஆவிக்குரிய போராட்டங்களை எதிர்கொள்ள முடியாதவர்களும் ஆவிக்குரிய மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்.

ஆனால், கிறிஸ்துவின் பிரமாணம் யுத்தத்தில் வெற்றி பெற வழியையும், தேவனுடைய ஆவியானவர், யுத்தத்தை எதிர்கொள்ள பெலனையும் தருகிறார். ஆவிக்குரிய யுத்தத்தில் தேவன் ஒருவரையும் தனித்து விடுவதில்லை.

ஆனால், தூக்கம், உணவு, சோம்பல் மற்றும் கொஞ்சம் விசுவாசம் சேர்த்துக் கொண்டு, எனக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நினைப்பவர்களுக்கு, வெற்றியின் கனியை ஆன்ரு வாம்மேக் செலவு செய்து வாங்கிக் கொடுப்பார் என்றால், எனக்கு ஆட்சேபனை இல்லை. 

Friday, February 21, 2020

இயேசுவின் அன்பைப் பெற்றால் மட்டும் போதுமா?

இயேசுவிடம் நித்திய ஜீவனைக் குறித்து கேள்வி கேட்டான் ஒரு பணக்கார வாலிபன்.

"நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று.

இயேசு அவனிடம் அன்புகூர்ந்து, அவனிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, பின்பு தன்னை பின்பற்றி வரச்சொன்னார்.

ஆனால் அந்த வாலிபன் இந்த கண்டிஷன் பிடிக்கமல், துக்கத்தோடு போய்விட்டான்.

இயேசு அவனிடம் அன்புகூர்ந்தார். ஆனால் அவனோ தன் சொத்தை அதிகமாக நேசித்தான்.

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. வாழ்க்கையில் இயேசுவின் அன்பைப் பெற்றால் மட்டும் போதாது. அவர் எதிர்பார்க்கும் காரியங்களை நம்மிடம் இருந்து விட்டகற்ற வேண்டும். அப்போது தான் நித்திய ஜீவனை உத்தரவாதமாகச் சொல்லமுடியும். 

Wednesday, February 19, 2020

பாவிகளுக்கு வைத்தியன் இயேசு

தவறே செய்யாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை. ஒருவகையில் பார்த்தால், குறைந்த அளவில் தவறு செய்தவர்களை விட, அதிக அளவில் தவறு செய்தவர்கள், அதிலிருந்து மனந்திரும்பும்போது மீண்டும் அந்தத் தவறுகளை செய்வதற்கான வாய்ப்பு குறைவு.

இன்றைக்கு இருக்கும் ஒருவனுடைய வீழ்ச்சியை வைத்து தீர்ப்பு செய்வது மனிதனுடைய சுபாவம். ஆனால் தேவனோ, பாவத்தில் வாழ்பவர்களை தீர்ப்பு செய்வதற்கு முன் வாய்ப்புகளைத் தருகிறார்.

இயேசு, அந்த வழியில், பெரிய நீதிமான்களைக் குறித்து அதிக கவலைப்படாமல், பாவிகளிடமே தன் ஊழியப் பயணத்தைத் தொடங்குகிறார். அதில் அவரால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, விசுவாசம் என்னும் நூலில் சந்ததியாகக் கட்டப்பட்டு கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக இருக்கிறோம்.

*இயேசு : பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை, நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்.

மாற்கு 2:17*